சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன்
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெளியான உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் பார்த்திபன். அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன் என்று மேடையிலேயே வெளிப்படையாக பேசினார். அதையடுத்து தமிழ்நாட்டை விட்டு தாண்டிச் சென்றதும் சாதி பெருமை பேசுகிறார் பார்த்திபன்.
இவரை வளர்த்து ஆளாக்கியது எல்லாம் தமிழ் சினிமா. ஆனால் இன்றைக்கு ஒரு தெலுங்கு படத்தில் நடித்ததுமே நான் தெலுங்கன் என்று மார்தட்டி பேசுகிறார் என்று பலரும் சோசியல் மீடியாவில் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். அதையடுத்து அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பார்த்திபன். என்றாலும் கூட அவர் மீதான விமர்சனங்கள் நின்றபாடில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் சாதி மதம் இல்லாதவர் என்ற சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார். இதுபற்றி பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில், மனதளவில் நான் ஜாதியில்லை மதமில்லை என்று உறுதியாய் இருப்பவன். இருந்தாலும் இடையில் அதற்கொரு சோதனை ஏற்பட்டதால் No caste, no religion என்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறேன் விரைவில் எனக்கொரு சான்றிதழ் கிடைக்கும் அதற்கு முன்பாக ஒரு GO கிடைக்கும்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛ஒரு நாட்காட்டியிலிருந்து ஏழெட்டை கழட்டி விட்டெறிந்தது போல என் பதிவுகள் அற்ற வெற்றிடமாய், நல்லதை மட்டுமே நினைவில் கொண்டு நம்பிக்கையோடு தொடர்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.