பிளாஷ்பேக் : தனியாக வெளியான முதல் சினிமா பாடல்
1958ம் ஆண்டு வெளிவந்த படம் 'தேடிவந்த செல்வம்'. எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜசுலோச்சனா, சரோஜாதேவி, வி.கே.ராமசாமி, டி.எஸ்.பாலையா, டி.கே.ராமச்சந்திரன், 'குலதெய்வம்' வி.ராஜகோபால், டி.பி.முத்துலட்சுமி, பி.ஆர்.மங்கலம், லட்சுமிபிரபா, ஏ.கருணாநிதி, டி.பாலசுப்ரமணியம், எம்.ஏ.கணபதி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நீலகண்டன் இயக்கியிருந்தார்.
உடல்நலம் சரியில்லாத டி. பாலசுப்பிரமணியம் தாயில்லாத தன் குழந்தையை, கிராமத்தில் தனது நண்பரிடம் (டி.எஸ். பாலையா) ஒப்படைத்துவிட்டு செல்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தன் மகனைத் தேடி இந்தியா திரும்புகிறார். ஆனால், அவரால் தன் நண்பரையோ மகனையோ கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இதில் காணாமல் போன மகனாக எஸ்எஸ் ராஜேந்திரன் நடித்திருந்தார்.
லிங்கப்பா இசையமைத்துள்ளார். பங்குனி போய் சித்திரை வந்தா மற்றும் பக்கத்திலே இருப்பே ஆகிய பாடல்கள் ஹிட்டானது. ஜல்லிக்கட்டு காளை என்ற பாடல் உருவாக்கப்பட்டு படத்தின் நீளம் கருதி அந்த பாடல் சேர்க்கப்படவில்லை. என்றாலும் படம் வெளியான சில வாரங்களில் 78 ஆர்பிஎம் பதிவில் மட்டுமே வெளியிடப்பட்டது. படத்தில் இடம்பெறாமல் தனியாக வெளியிடப்பட்ட முதல் சினிமா பாடல் என்ற வகையில் இந்த பாடல் முக்கியத்துவம் பெறுகிறது.