70 ஆயிரம் முறை டவுன்லோட் செய்யப்பட்ட விஜய் 'அபிடவிட்'
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் இறங்கினாலும் அவரது ரசிகர்களுக்கு இன்னும் அந்த 'வியூஸ், லைக்ஸ், ஷேர்' ஆகியவற்றின் மீது தனி மோகம் இருக்கத்தான் செய்கிறது. அவரது படங்களின் டிரைலர்கள், டீசர்களுக்கு எவ்வளவு 'வியூஸ்' வந்துள்ளது என்பது குறித்து 'சாதனை… சாதனை' என சமூக வலைத்தளங்களில் பெருமைபட்டுக் கொள்வார்கள்.
இப்போது ஒரு 'டவுன்லோடு'க்கு கூட பெருமைபட்டுக் கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக தனது தவெக கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் விஜய். அதற்கான வேட்புமனுவை இரண்டு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவரது 'அபிடவிட்', அதாவது பிரமாணப் பத்திரத்தையும் இணைத்திருந்தார். இது வழக்கமா தேர்தல் விண்ணப்ப நடைமுறைதான்.
ஆனால், அதில் கூட 'வியூஸ்' கொண்டு வந்து சேர்ப்பதுதான் விஜய் ரசிகர்களின் செயலாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள விஜய்யின் அபிடவிட் 70 ஆயிரத்திற்கும் சற்று கூடுதலாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. ஆஹா… எவ்வளவு டவுன்லோடு என்று அதற்கும் பதிவிட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
அதேசமயம் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அபிடவிட்டை 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளனர். இதை முறியடிப்பதற்காக விஜய் ரசிகர்களிடம் கூட அவர்களது ஐ.டி. விங் புதிய சாதனை படைக்க வேண்டும். எனவே, அதிகமாக டவுன்லோடு செய்யுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள். சில நாட்கள் கழித்துப் பார்ப்போம், என்ன செய்கிறார்கள் என்று…..