நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வதில்லை : ஜேடி சக்கரவர்த்தி
நாகார்ஜுனா நடிப்பில் வெளியான உதயம் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ஜேடி சக்கரவர்த்தி. அதன்பிறகு இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் சில படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் மாறி மாறி நடித்தார். தற்போது சில முக்கிய கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வது கிடையாது, சூழ்நிலை சிலநேரம் அவர்களை அப்படி ஒரு இக்கட்டில் தள்ளுகிறது என்று கூறி தான் நிஜத்தில் சந்தித்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறும்போது, “பல வருடங்களுக்கு முன் நானும் நடிகர் சுரேஷும் அப்போது பிரபலமாக இருந்த நடிகை ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றோம். அந்த சமயத்தில் திடீரென அங்கே எதிர்பாராமல் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர் உள்ளே வந்தார். உடனே அந்த நடிகை எங்கள் இருவரையும் அந்த அறையில் இருந்த கட்டிலின் கீழ் மறைந்து கொள்ள சொன்னார். வந்த தயாரிப்பாளர் நடிகையிடம் கோபாவேஷமாக பேசியதுடன் கேட்கவே கூசும் சில அநாகரிக வார்த்தைகளையும் பேசினார்.
அவர் சென்றபிறகு நாங்கள் வெளியே வந்தபோது அந்த நடிகை இந்த சம்பவத்தால் உடைந்து போய் அழுவார் என நினைத்தால் அவர் சிரித்துக் கொண்டே, இது பழகிவிட்டது. என்ன செய்வது, அவர் மிகப்பெரிய தயாரிப்பாளர்.... ஒரு பக்கம் வாய்ப்புகள் தேவைப்படுகிறது.. இன்னொரு பக்கம் அவரை பகைத்துக் கொண்டு இந்த துறையில் எதுவும் செய்ய முடியாது என்று விரத்தியுடன் சொன்னார். சினிமாவில் சில நடிகைகள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டம் இப்படித்தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.