7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகனான கயல் சந்திரன் : கை கொடுக்குமா 'சிங்கா'
பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சந்திரன். பெரிய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவந்த இந்த படம் தோல்வி அடைந்தது. சந்திரன் பெயருக்கு முன்னால் 'கயல்' ஒட்டிக் கொண்டாலும், அடுத்தடுத்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அடுத்து நடித்த 'ரூபாய்' படம் வெற்றி பெறவில்லை. 'பார்ட்டி' படம் வெளிவரவில்லை. 2019ல் வெளியான திட்டம்போட்டு திருடுற கூட்டமும்' அவருக்கு உதவவில்லை.
இந்த நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு அவர் கதை நாயகனாக நடித்துள்ள 'சிங்கா' வெளிவர இருக்கிறது. இவருடன் சிஜா ரோஸ், மீனாட்சி, ஆதித்யா கதிர் மற்றும் மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ துரைசிங்கம் இயக்கி உள்ளார். மனோஜ் சின்னசுவாமி இசை அமைத்துள்ளார், அசோக் குமார் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காமெடி கலந்த லவ் செண்டிமென்ட் படமாக உருவாகி வருகிறது. 'சிங்கா' என்ற நாய்குட்டி என்றாலே கயல் சந்திரனின் முன்னாள் காதலி மீனாட்சிக்கு உயிர். அதை பாதுகாக்கும் பொறுப்பை அவர் கயல் சந்திரனிடம் கொடுக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்திரன் சிஜா ரோசை மணக்கிறார். திருமணத்திற்கு பிறகு சந்திரன் ஆசையாய் வளர்க்கும் நாய் முன்னாள் காதலியுடையது என்று அவருக்கு தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் சந்திரனுக்கு 'சிங்கா' அந்த வெற்றியை தரும் என்று அவர் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்.