விஜய்யை கடுமையாக விமர்சித்தற்காக வருந்துகிறேன்: சேரன் அந்தர் பல்டி
விஜய் புதிய கட்சி தொடங்கி தேர்தல் களம் கண்டபோது பெரும்பாலான நடிகர்கள் அவரை விமர்சிக்கவில்லை. ரஜினி, கமல்கூட அதிகம் விமர்சிக்கவில்லை. தேர்தல் களத்தில் பிரசாரம் செய்த சத்யராஜ் மட்டுமே கடுமையாக விமர்சித்தார். ஆனால் வெளியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் விமர்சித்தது சேரன்தான்.
ஆனால் தற்போது விஜய் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருப்பதால் அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார். 'உங்களை விமர்சித்ததற்காக வருந்துகிறேன்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் அந்த பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பது தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்.
எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன். இவ்வாறு சேரன் குறிப்பிட்டுள்ளார்.