ஒரே நாளில் வெளியான 'கேஜிஎப்' இசையமைப்பாளரின் இரு படங்கள்
கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் இசையமைக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்த வகையில் முதன்முறையாக தமிழில் 'பிளாஸ்ட்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார். அர்ஜுன், அபிராமி நடித்துள்ள இந்த படம் நேற்று வெளியாகி உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு பின்னணி இசை மிகப் பக்கபலமாக அமைந்துள்ளது.
அதேபோல மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மார்க்கோ' படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள 'காட்டாளன்' படத்திற்கும் இசையமைத்துள்ளார். காடுகளின் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு கிட்டத்தட்ட கேஜிஎப் பாணியிலேயே பின்னணி இசையால் மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்துள்ளார் ரவி பஸ்ரூர். அந்த வகையில் இந்த வாரம் ரவி பஸ்ரூருக்கு மிக முக்கியமான வாரமாக அமைந்து விட்டது.