உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நடிகர் சிவகுமாரின் “100” என்ற இலக்கை தவறவிட்ட அவரது “வண்டிச்சக்கரம்”

பிளாஷ்பேக்: நடிகர் சிவகுமாரின் “100” என்ற இலக்கை தவறவிட்ட அவரது “வண்டிச்சக்கரம்”


தமிழ் திரையுலகில் தீய பழக்க வழக்கங்கள் ஏதுமின்றி, தேகப் பயிற்சி, தியானம் போன்றவற்றை தனது வாழ்நாள் முழுதும் முறையாகப் பயிற்சி செய்து, உடலையும், மனதையும் தெளிவாக வைத்திருந்த வெகுசில திரைக் கலைஞர்களில் மிகவும் குறிப்பிடும்படியான ஒரு திரைக்கலைஞர்தான் நடிகர் சிவகுமார். 1965ம் ஆண்டு ஏ வி எம் தயாரித்த “காக்கும் கரங்கள்” என்ற திரைபடத்தின் மூலம் ஒரு நடிகராக இயக்குநர் ஏ சி திருலோகச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தொடர்ந்து எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன், ஏ வி எம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற அன்றைய முன்னணி நாயகர்களின் பெரும்பாலான படங்களில் ஒரு துணை நடிகராகவே நடித்து வந்தர்ர்.

1970களில்தான் இவர் ஒரு தனிக் கதாநாயக அவதாரம் எடுக்கவே வழிவகை செய்தது நம் தமிழ் திரையுலகு. “பொண்ணுக்குத் தங்க மனசு”, “சொல்லத்தான் நினைக்கிறேன்”, “கண்மணி ராஜா”, “வெள்ளிக்கிழமை விரதம்” போன்ற திரைப்படங்கள் இவர் தனிக் கதாநாயகனாக நடித்து வெளிவந்த இவரது ஆரம்பகால திரைப்படங்கள். இதன் பின்னர் தனக்கான ஒரு தனி இடத்தை தமிழ் திரையுலகில் தக்க வைத்துக் கொண்டிருந்த நடிகர் சிவகுமார் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த நிலையில், அவர் வித்தியாசமான ஒரு நாயகன் கதாபாத்திரத்தில் நடித்து, 1980ல் வெளிவந்த ஒரு வெற்றித் திரைக்காவியம்தான் “வண்டிச்சக்கரம்”.

இந்தத் திரைப்படத்திற்கு என தனிச் சிறப்புகள் பல உண்டு. தனது இயல்பான நடிப்பிலிருந்து மாறி, ஒரு முரடன் கதாபாத்திரத்தில் தோன்றி, பின் காதலுக்காக தன்னுடைய அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் விடுபட்டு வாழ முயற்சிக்கும் ஒரு முரட்டு வாலிபனாக நடிகர் சிவகுமார் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தவர் நடிகரும், கதை வசனகர்ததாவுமான நடிகர் வினு சக்கரவர்த்தி. இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் விஜயலக்ஷ்மி என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த ஒரு நடிகையை ஸ்மிதா என பெயர் மாற்றம் செய்து, 'சில்க்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் வினுச்சக்கரவர்த்தி. அன்று அறிமுகமான நடிகை 'சில்க்' ஸ்மிதா, அடுத்த பதினைந்து ஆண்டுகள் கலையுலகினரையும், தென்னிந்திய திரை ரசிகர்களையும் தனது மயக்கும் விழி கொண்டு, வசியம் செய்து வைத்திருந்தார்.

1976லேயே இத்திரைப்படத்திற்கான முழு திரைக்கதையையும் நடிகர் வினுச்சக்கரவர்த்தி எழுதி முடித்திருந்த போதிலும், படப்பிடிப்பு 1979ல்தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம்தான் ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரின் 100வது திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” நடிகர் சிவகுமாரின் 100வது திரைப்படமாக முந்திக் கொள்ள, இத்திரைப்படம் அவரது 101வது திரைப்படமாக வெளிவந்தது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தேவராய காய்கறி சந்தையிலும், மைசூர் பிரீமியர் ஸ்டூடியோவிலும் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்திற்கு இசைவடிவம் தந்திருந்தவர்கள் சங்கர்-கணேஷ்.

படத்தின் பாடல்களில் ஒன்றான “வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை ஊத்திக்கிட்டு கேளேண்டா என்னோட பாட்ட, சிலுக்கோட கையாள வாங்கிக் குடி” என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததோடு, நடிகை 'சில்க்' ஸ்மிதாவிற்கும் தென்னிந்திய திரையுலகில் அது ஒரு அசைக்க முடியாத அடையாளமாகவும் மாறிப்போனது. மேலும் இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு சினிமா விருதினையும், சிவகுமார், சரிதா ஆகியோர் அந்த ஆண்டின் சிறந்த நடிகர்களுக்கான விருதினையும் வென்றெடுக்க காரணமாகவும் அமைந்திருந்தது. 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று, இயக்குநர் கே விஜயனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமும் அவரது முந்தைய திரைப்படமான “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” போலவே ஒரு தொடர் வெற்றியை பதிவு செய்த திரைப்படமாகவே அமைந்து நடிகர் சிவகுமாரின் கலையுலகப் பணிக்கு சிறப்பு சேர்த்திருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !