உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்?

இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் சிலரையும் பிடிக்கும். அந்தக் காலத்தில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோர் நடித்த டப்பிங் படங்கள் தமிழகத்திலும் ஓரளவிற்கு வசூலைப் பெற்று ஓடின.

இந்தக் காலத்தில் பல நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படங்களாக தமிழில் டப்பிங் ஆகி வெளியாகின்றன. அவற்றில் ஒரு சிலருக்கு மட்டுமே இங்கும் நல்லதொரு வரவேற்பு கிடைக்கிறது. இன்றைய தெலுங்கு நடிகர்களில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இங்கும் வரவேற்பைப் பெறுகின்றனர்.

ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் தமிழகத்திலும் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. அதன்பின் ராம்சரண் நடிக்க, ஷங்கர் இயக்கிய தெலுங்குப் படமான 'கேம் சேஞ்ஜர்' படம் கடந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்தது. ஆனால், அப்படம் தெலுங்கிலும் சேர்த்து மொத்தமாகவே படுதோல்வியைத் தழுவியது. சுமார் 400 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 200 கோடி வசூலை நெருங்கியதாகச் சொன்னார்கள்.

அந்தப் படத்தின் மூலம் தனது பெருமையை சற்றே இழந்த ராம்சரண், வசூலை மொத்தமாக இழந்தார். அதிலிருந்து எப்படியாவது மீள வேண்டுமென அடுத்து 'பெத்தி' படத்தைத் தேர்வு செய்து கடுமையான உழைப்பைக் கொட்டி நடித்துள்ளார்.

நாளை வெளியாக உள்ள இப்படம் ராம்சரணனின் பெருமை, வசூலை மீட்டெடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !