விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா?
விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் உருவான “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் படம் வெளிவராத நிலையில், இந்த படத்தின் விளம்பர பணிகள், அடுத்தகட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாகி உள்ளன. பூரி ஜெகன்நாத் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் விஜய் சேதுபதி கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். நீண்ட காலத்திற்கு பின் தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கௌர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தலைப்பு, மற்றும் நடிகர்கள் குழு ஆகியவை டப்பிங் படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பூரிஜெகன்நாத் தெலுங்கு பட இயக்குனர் என்பதால், தெலுங்கு வாடையும் அதிகம் அடிக்கிறது. டீசர் பார்த்தால் படத்தின் கதை, மற்ற விஷயங்கள் புரியும் என்று கூறப்படுகிறது.
இந்த படம் தவிர, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல், மணிரத்னம் இயக்கும் படம், பாலாஜி தரணிதரன் படங்களில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பாலா படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஏதாவது ஒரு படம் வெற்றி பெறாவிட்டால் அவர் மார்க்கெட், அவரின் சாடிலைட், டிஜிட்டல் பிசினஸ் டவுண் ஆகும் என்று கூறப்படுகிறது.