செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டாலும் இன்னொரு பக்கம் சினிமாவில் நடிப்பதையும் விடாமல் தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாரத் பாக்ய விதாதா (இந்தியாவின் விதியை நிர்ணயிப்பவர்கள்) என்கிற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது அதில் பாதிக்கப்பட்டோரை அங்கிருந்த காமா மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் போராடி 400க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றிய நிகழ்வை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கங்கனா இதில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் 12-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து கங்கனா கூறும்போது, “மருத்துவத் துறையில் செவிலியர்கள் மிக முக்கிய பங்காற்றினாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை. இப்போதும் கூட செவிலியர்கள் அணியும் சீருடையானது இன்னும் ஆங்கிலேயர் காலத்து தாக்கத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. குறிப்பாக சீருடையில் பயன்படுத்தப்படும் தொப்பி, பின், பெல்ட் போன்ற விஷயங்கள் அமெரிக்க கடற்படை பயன்படுத்திய சீருடை பாணியை ஒத்திருப்பது போல இருக்கிறது. இந்திய தட்பவெட்ப நிலைக்கு இந்த உடை பொருந்துவதில்லை. எனவே செவிலியர்களின் சீருடையை அவர்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப இந்தியமயமாக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.