உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு

சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு


பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சுகன்யா 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 'சின்னக்கவுண்டர், வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிச்சாமி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கடந்த 1996ல் சந்தன கடத்தல் வீரப்பன் அளித்த பேட்டி ஒன்று அப்போது ஒரு சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதில் வீரப்பன், சுகன்யா குறித்து பேசிய அவதூறு செய்தி ஒன்று வெட்டப்படாமல் அப்படியே ஒளிபரப்பானது. இது சுகன்யா மற்றும் அவரது தரப்பினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.

இதனை தொடர்ந்து அந்த தனியார் சேனல் நிறுவனத்தின் மீது ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். பின்னர் அதை 10 லட்சத்து 500 என குறைத்துக் கொண்டார். இந்த வழக்கில் 2015ல் சுகன்யாவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அந்த பேட்டியை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சேனல் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிட்டி சிவில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் சுகன்யாவிற்கு இழப்பீட்டுத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் 30 வருடம் கழித்து சுகன்யாவிற்கு இந்த தீர்ப்பு ஆறுதல் அளிக்கும் விதமாக வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !