உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா

பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா


பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை சார்மி தயாரிப்பில் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோட்'. கன்னட நடிகர் துனியா விஜய், வில்லனாக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் விரைவில் ரிலீசாகிறது. படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகை சம்யுக்தா பேசியதாவது: பூரி ஜெகன்நாத் உடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை எளிமையாகவும், ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர். இயக்கம் என்ற கலையை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். விஜய் சேதுபதியின் ரசிகை நான். ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.

பூரி ஜெகன்நாத்க்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பூரி ஜெகன்நாத்

இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது: இது எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதிக்கு முதலில் நன்றி. ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது பெருமையான விஷயம். அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. எப்போதும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். பாஸிடிவான மனிதர். நடிகர் துனியா விஜயின் பங்களிப்பு, படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

'ஸ்லம் டாக்' திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.

இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-06-10 06:14:00

படம் வருமுன் பூரி மசாலா எல்லாம் நல்லா வரும் படம் வந்த பிறகு தான் தெரியும் பூரி கட்டை பறந்து வந்து அடி வாங்கி ரசிகர்கள் அலறி ஓடி போவது..