உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சிறைவாசம் முடிந்து திரைக்குத் திரும்பிய என் எஸ் கிருஷ்ணனின் “பைத்தியக்காரன்”

பிளாஷ்பேக்: சிறைவாசம் முடிந்து திரைக்குத் திரும்பிய என் எஸ் கிருஷ்ணனின் “பைத்தியக்காரன்”

என் எஸ் கிருஷ்ணன் சிறை சென்ற பின் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சரி செய்யவும், கடன்களிலிருந்து மீளவும் ஓர் திரைப்படம் எடுக்கலாம் என நடிகர் எஸ் வி சகஸ்ரநாமத்திற்கும், என் எஸ் கிருஷ்ணனின் மனைவி டி ஏ மதுரத்திற்கும் நண்பர்கள் ஆலோசனை கூறினர். அவர்களில் முக்கியமானவர்கள் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு. “என் எஸ் கே பிலிம்ஸ்” என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனமும் நிறுவப்பட்டது. நிர்வாகத்தை நடிகர் சகஸ்ரநாமம் கவனித்துக் கொள்ள, அப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த “பைத்தியக்காரன்” என்ற நாடகத்தையே சினிமாவாக எடுக்கலாம் என்றும் முடிவும் செய்யபட்டுவிட்டது.

“ரத்தசாட்சி” என்ற பெயரில் இயக்குநர் ப நீலகண்டன் எழுதிக் கொடுத்த நாடகத்தை, நடிகர் எஸ் வி சகஸ்ரநாமமும், எம் வி ராஜாமணி என்பவரும் “பைத்தியக்காரன்” என பெயர் மாற்றம் செய்து, சில காட்சிகளையும் மாற்றி அமைத்து நாடகமாக நடத்தி வந்தனர். திட்டமிட்டபடி படப்பிடிப்பும் 1946ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்கினர். படத்தின் நாயகன் எஸ் வி சகஸ்ரநாமம் பைத்தியக்காரனாக நடித்திருந்ததோடு, படப்பிடிப்பு நிர்வாகம் அனைத்தையும் கவனித்தும் கொண்டிருந்தார்.

என் எஸ் கிருஷ்ணன், எம் கே தியாகராஜ பாகவதர் வழக்கு லண்டன் பிரிவியூ கவுன்சிலில் 1947 பிப்ரவரி 24 அன்று விசாரணைக்கு வந்தது. பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரது வழக்கறிஞர் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு வாதாடி, பின் லண்டன் பிரிவியூ கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றதிற்கு சிபாரிசு செய்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் விசாரணை நடத்தி, 1947ம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று பாகவதரும், என் எஸ் கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானதும் என் எஸ் கிருஷ்ணன் “பைத்தியக்காரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள தயாரானார். படத்தின் திரைக்கதை அமைப்பிலும் மாற்றம் செய்து என் எஸ் கிருஷ்ணனுக்கும் ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டது. ஏன் எஸ் கிருஷ்ணன் நடிக்கின்றார் என்பதற்காக டி ஏ மதுரத்திற்கு இன்னொரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு அவருக்கு ஜோடியாக்கினர் படக்குழுவினர். ஒரு கதாபாத்திரம் தீவிரமானதாகவும், இன்னுமொரு கதாபாத்திரம் நகைச்சுவை என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் டி ஏ மதுரம்.

சிறையிலிருந்து விடுதலைப் பெற்றதும் என் எஸ் கிருஷ்ணன் நடித்த முதல் திரைப்படமான இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஒரு சிறு வேடமேற்று நடித்திருந்தார். பிரபல ஹிந்தி தயாரிப்பாளரும், இயக்குநருமான வி சாந்தாராமின் “துனியா நா மனே” என்ற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்டம், விதவை மறுமணத்தை ஆதரித்தும், வயதான ஆண்கள் தங்களை விட இளைய பெண்களை மணம் முடிப்பதற்கு எதிராகவும் பேசிய ஒரு சமூக விழிப்புணர்வுத் திரைப்படமாக 1947ல் வெளிவந்து, வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி, “என் எஸ் கே பிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து நான்கு திரைப்படங்களை தயாரிக்கவும் வழிவகுத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !