முதல் பட இயக்குனருக்கு 5 வருடங்கள் வில்லனாக வந்து நின்ற பஹத் பாசில் படங்கள்
மலையாளத்தில் கடந்த வாரம் ‛மோலிவுட் டைம்ஸ்' என்கிற படம் வெளியாகி உள்ளது. 'பிரேமலு' பட புகழ் நஸ்லென் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் சினிமா பின்னணியை கொண்டு உருவாகியுள்ளது. சினிமாவில் இயக்குனராக போராடும் ஒரு இளைஞனுக்கு ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தின் ஹீரோவாக நடித்துள்ள நபரால் அவரது வாய்ப்பு எப்படி தடைபட்டு போகிறது, அதைத் தாண்டி அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் இதன் கதை.. சொல்லப்போனால் இந்த படத்தின் இயக்குனரான அபிநவ் சுந்தர் நாயக்கிற்கு நிஜத்திலும் இதேபோன்று அவரது முதல் படத்தை இயக்கும்போது தொடர்ந்து 5 வருடங்கள் எதிர்பாராத கோணத்தில் அடுத்தடுத்து தடைகள் விழுந்திருக்கின்றன. அதற்கு காரணம் நடிகர் பஹத் பாசிலின் படங்கள் தான்.
ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வினீத் சீனிவாசன் நடிப்பில் வெளியான 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' என்கிற திரைப்படம் வரவேற்பு பெற்றது. இதன் மூலம் தான் இந்த அபிநவ் சுந்தர் நாயக் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்த படத்தை இயக்குவதற்கு முன்பாக 5 வருடங்களுக்கு முன்பே அவர் டைரக்ஷனுக்கு தயாராகி விட்டார். அப்படி தனது முதல் படத்தின் கதையை எழுதிய போது, அந்த சமயத்தில்தான் பஹத் பாசில் நடித்த 'கும்பளாங்கி நைட்ஸ்' திரைப்படம் வெளியானது. தன்னுடைய கதையும் அதேபோல இருப்பதால் அடுத்ததாக வேறு ஒரு கதையை எழுதினார் அபினவ்.
அந்த நேரத்தில் பஹத் பாசில் நடித்த 'டிரான்ஸ்' திரைப்படம் வெளியானது. தான் எழுதியிருந்த கதாபாத்திரம் போலவே டிரான்ஸ் படத்தில் பஹத் கதாபாத்திரம் இருந்ததால் அதையும் ஒதுக்கி வைத்து விட்டு மூன்றாவதாக ஒரு கதையை எழுதியபோது, அப்போது ஓடிடியில் வெளியான பஹத் பாசில் நடித்த 'ஜோஜி' படத்திற்கும் இவர் கதைக்கும் ஒற்றுமை இருக்க, அந்த கதையையும் தள்ளி வைத்துவிட்டு அடுத்ததாக இவர் இயக்கிய படம் தான் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் அபிநவ் சுந்தர் நாயக்.