இயக்கம், நடிப்பு இரண்டும் செய்வேன்: முன்னாள் அமைச்சர் மகள் இமயா
குறும்படங்கள், வெப் தொடர்கள் இயக்கிய கிஷோர் குமார் 'ஹார்ட்டின்' படத்தின் முலம் இயக்குனராகி இருக்கிறார். 'பேட்ட' படத்தில் நடித்த சனந்த் கதையின் நாயகன். கதையின் நாயகிகளாக மடோனா செபஸ்டின் மற்றும் புதுமுக நடிகை இமயா நடிக்கிறார்கள். இதில் இமயா, தமிழக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள்.
வெளிநாட்டில் திரை துறை சார்ந்த படிப்பை முடித்துள்ள இமயா, தமிழில் சில படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்துள்ளார், தற்போது ஹார்ட்டின் படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இது பற்றி கேட்டபோது, ''நான் திரைத்துறைக்கு வருவதை ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் விரும்பவில்லை, தடுத்தனர். ஆனால் நான் பெரும் முயற்சி செய்து, என் விருப்பத்தை தெரிவித்து இந்த துறைக்கு வந்தேன், சில படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். கதை விவாதங்களில் கலந்து கொண்டேன். தற்போது ஹார்ட்டின் படம் மூலம் கதாநாயகியாக நடித்துள்ளேன். எதிர் காலத்தில், படம் இயக்குவேன், நடிக்கவும் செய்வேன். என் ஆசைகள் பல உள்ளன. அரசியல், சினிமா இரண்டுமே கடினமான துறைகள் தான். தற்போது சினிமாவில் கவனம் செலுத்துகிறேன். என் குடும்பத்தில் இருந்து நான் தான் முதலில் நடிக்க வந்துள்ளேன். மக்கள் சப்போர்ட் எனக்கு எப்போதும் வேண்டும்'' என்கிறார் இமயா.