முதன் முதலாக சினிமாவில் நடனமாடிய அன்னா பென்
மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகை அன்னா பென். 'கும்பளாங்கி நைட்ஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'ஹெலன்' படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 'கல்கி' பான் இந்தியா படத்தில் ஆக் ஷன் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனாலும் அவர் எந்தப் படத்திலும் நடனமாடியது இல்லை.
தமிழில் 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 'கான் சிட்டி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் முதன்முறையாக நடனமாடி இருக்கிறார். இதில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
படத்தில் நடனமாடியது குறித்து அன்னா பென் கூறியிருப்பதாவது: இது எனது இரண்டாவது தமிழ் திரைப்படம். 'கொட்டுக்காளி' படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது மக்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் 'கான் சிட்டி' படத்தில் நடித்திருக்கிறேன்.
இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்பு பாணியும், வெளிப்பாடும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார். 'நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்' என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது. மேலும், இந்தப் படத்தில்தான் நான் முதன்முறையாக நடனமாடியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. சவாலான நடன அசைவுகளை நம்பிக்கையுடன் கற்றுக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். என்றார்.