கால்பந்து விளையாட்டு பின்னணியில் உருவாகும் '7 ஸ்டார் பாய்ஸ்'
உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் '7 ஸ்டார் பாய்ஸ்' படம் தமிழிலும் வர உள்ளது.
இது குறித்து இயக்குனர் நிகில் பிரேம்ராஜ் கூறுகையில், ‛‛ '7 ஸ்டார் பாய்ஸ்' படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான 'பிகில்' ஐஎம் விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இளம் கால்பந்து விளையாட்டு வீரர்களின் கால்பந்தாட்ட கனவின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக இந்த கதை உருவாகி உள்ளது.
கால்பந்தாட்ட விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள உள்ளூர் இளைஞர்கள், உலக கால்பந்தாட்ட ஜாம்பவானான மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதை தெரிந்து கொண்ட ஹீரோ ஆண்டனி வர்கீஸ்.அந்த இளைஞர்களை ஒன்று திரட்டி இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐஎம் விஜயனிடம் அறிமுகம் செய்கிறார். அவர் இந்த இளம் வீரர்களின் ஆர்வத்தையும், திறமையையும் கண்டறிவதுடன் அவர்களுக்கு பயிற்சியாளராகவும் செயல்படுகிறார் விஜயன்.
இந்நிலையில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியில் இந்த இளம் வீரர்கள் அடங்கிய '7 ஸ்டார் பாய்ஸ்' குழு கலந்து கொள்கிறது. அரை இறுதி போட்டி வரை முன்னேறும் இந்த 7 ஸ்டார் பாய்ஸ் அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை. கால்பந்தாட்ட வீரரின் காதலும் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதி 25 நிமிடங்கள் கால்பந்தாட்ட போட்டிக்கான காட்சிகள் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலையாளம் தவிர, விரைவில் தமிழிலும் வருகிறது' என்றார்.