வெளியீடு வெளிச்சத்திற்காக காத்திருக்கும் படங்கள் : கதவு திறக்குமா?
தமிழ் சினிமா உலகில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவை நூற்றுக்கணக்கில் இருக்கும். ஆனால், சில முன்னணி நடிகர்களின் நடித்த படங்கள் கூட ஏதோ சில காரணங்களால் சில பல வருடங்களாக முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டாலும் அவற்றிற்கான வழி அவ்வப்போது தடைபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2025ம் வருடப் பொங்கலுக்கு விஷால் நடித்த 'மதகஜ ராஜா' படம் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அப்படம் 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது. அத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் அப்படம் பெற்றுத் தந்த வெற்றி இது போல முடங்கிக் கிடக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது. இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் இப்படி முடங்கிக் கிடந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அரவிந்த்சாமி நடித்துள்ள 4 படங்களும், அருண் விஜய் நடித்துள்ள 2 படங்களும் கடந்த சில வருடங்களாக முடங்கிக் கிடக்கின்றன.
அரவிந்த்சாமிக்கு 4
மறைந்த நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் உருவான 'சதுரங்க வேட்டை 2' படம் முடிந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. நிதி சிக்கலால் சிக்கியுள்ள இந்தப் படம் வருமா வராதா என்பது நிச்சயமற்றதாக உள்ளது.
அரவிந்த்சாமி நடித்த மற்றொரு படமான 'கள்ளபார்ட்' முடிந்து நான்கைந்து வருடங்களாகிவிட்டது. ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இதன் டீசர் 2022ம் வருடத்திலேயே வெளியாகிவிட்டது.
செல்வா இயக்கத்தில், இமான் இசையில், அரவிந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடித்துள்ள 'வணங்காமுடி' படம் முடிந்து ஐந்தாறு வருடங்களாகவிட்டது. 2021ம் ஆண்டில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதன் நிலையும் என்னவென்று தெரியவில்லை.
கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஷ்ரேயா, ஆத்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'நரகாசூரன்' படம் 2018ம் ஆண்டே வெளியாக வேண்டிய படம். அந்த ஆண்டிலேயே படத்தின் டிரைலரும் வெளியானது. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இத்தனை வருடங்களாக வெளியாகாமல் இருக்கிறது.
அருண் விஜய்க்கு இரண்டு
அருண் விஜய் நடித்த 'வா டீல்' படம் முடிந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ரத்தின சிவா இயக்கத்தில் தமன் இசையமைப்பில் அருண் விஜய், கார்த்திகா நாயர் மற்றும் பலர் நடித்துள்ள படம். இப்படத்தின் டிரைலர் 2015ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. அதன்பின் இப்படத்தை நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியிட முயற்சித்து அதிலும் தோல்வியடைந்தார்கள்.
அருண் விஜய் நடித்துள்ள மற்றொரு படம் 'பார்டர்'. அறிவழகன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில், அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்டெபி பட்டேல் மற்றும் பலர் நடித்துள்ள படம். இப்படத்தின் டிரைலரை 2021ம் ஆண்டிலேயே வெளியிட்டிருந்தார்கள். பைனான்ஸ் பிரச்சனையால் இந்தப் படம் வெளியாகாமல் நிற்கிறது என்கிறார்கள்.
கர்ஜிக்காத கர்ஜனை
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'கர்ஜனை' படம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2018ம் ஆண்டில் அப்படத்தின் டிரைலரை வெளியிட்டிருந்தார்கள். சுந்தர் பாலு இயக்கத்தில், அம்ரிஷ் இசையில், த்ரிஷா, அமித், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.
வெளிவராமல் நிற்கும் த்ரிஷாவின் படங்கள் என்று பார்த்தால் 'சதுரங்க வேட்டை 2, கர்ஜனை' என இரண்டு படங்கள் உள்ளன.
அதுபோல ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள 'கள்ளபார்ட், பார்டர், பார்ட்டி' ஆகிய மூன்று படங்கள் இன்னும் வெளிவராமல் முடங்கி நிற்கின்றன.
நட்சத்திரம் எப்போதும் ஒளிரும்
முன்னணி நடிகரான விக்ரம் நடிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள 'துருவ நட்சத்திரம்' படம் நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இதோ அதோ என இப்படத்தின் வெளியீடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வந்தாலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்றும் கவுதம் சொல்லி இருக்கிறார். 9 வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியிட்டார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் வெளியிட முயற்சித்த போது மீண்டும் ஒரு டிரைலரை வெளியிட்டார்கள். விரைவில் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து ஒரு முடிவு நிச்சயம் தெரிய வரும்.
10 ஆண்டுகளாக கிடப்பில்
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில், சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படம் முடிந்து 10 வருடங்களுக்கும் கூடுதலாகிவிட்டது. 2015ல் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். அப்போது வளரும் நடிகர்களாக இருந்தவர்கள் நடித்த படம். யுவன் - வைரமுத்து கூட்டணியும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி முயற்சித்தால் இப்படம் வெளியாகலாம்.
எப்பதான் ‛பார்ட்டி'
வெங்கட் பிரபு இயக்கத்தில், பிரேம்ஜி இசையில், ஜெய், சிவா, ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம் ‛பார்ட்டி'. பிஜி தீவில்தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடந்தது. இப்படத்தின் டீசர் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சில வருடங்களாக இப்படத்தை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்தப் படமும் எப்போது வந்தாலும் வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள். பிஜி அரசு வழங்க வேண்டிய மானியத் தொகை காரணமாக இப்படம் சிக்கலில் உள்ளது.
குயின் 2வே ஆரம்பிச்சாச்சு...
ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கங்கனா ரணவத் நடித்த 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக் 'பாரிஸ் பாரிஸ்'. 2018ல் டீசர் வெளியாகியும் இப்படம் இன்னும் வரவில்லை. இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஹிந்தியில் 'குயின் 2' படத்தைத் தற்போது எடுத்து முடித்துவிட்டார்கள். இந்தப் படம் பற்றியெல்லாம் எந்த ஒரு தகவலும் இல்லை.
மேலே நாம் குறிப்பிட்டுள்ளவை சில முக்கியமான படங்கள். இந்த வெளிவராத படங்களின் பட்டியலில் இன்னும் சில படங்களும் உள்ளன. யு டியுப், ஓடிடி, இணையம் மூலம் திரையிடல் என பல வழிகளில் கடந்த சில வருடங்களில் படங்களை வெளியிடுகிறார்கள். தியேட்டர்களில் வெளியிட சிக்கல் இருந்தால் இந்த வழிகளைப் பற்றி யோசிக்கலாம்.