உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அம்மா'வை கைப்பற்ற அனுமதிக்க மாட்டேன் : ஸ்வேதா மேனன் ஆவேசம்

'அம்மா'வை கைப்பற்ற அனுமதிக்க மாட்டேன் : ஸ்வேதா மேனன் ஆவேசம்

மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பிற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்வேதா மேனன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ஸ்வேதா முதல் பெண் தலைவர் ஆனார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து 'அட்-ஹாக்' கமிட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் 'அம்மா'வின் தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை என்று அறிவித்த ஸ்வேதா மேனன், 'அட்-ஹாக்' கமிட்டிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கமிட்டியின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில் ஸ்வேதா மேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது: 'அம்மா' அமைப்பிற்காகவே இத்தனை நாட்களாக நான் அமைதி காத்து வந்தேன். நான் அமைதியாக இருந்தால், 'அம்மா'வைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்று நினைத்தேன். ஆனால், எனது தனிப்பட்ட நம்பகத்தன்மை தொடர்ந்து தாக்கப்பட்டு, என் பெயர் களங்கப்படுத்தப்படும் சூழலில், என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிக்காமல் நான் பின்வாங்கப் போவதில்லை.

நான் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், 'அம்மா' அமைப்பை அநாதையாக்கிவிட்டதாகவும் இப்போது சிலர் கூறுகிறார்கள். நான் யாரையும் ஏமாற்றவில்லை. 'அம்மா' அமைப்பை நான் அநாதையாக்கவும் இல்லை.

ஜூன் 21, 2026 அன்று நடைபெற்ற 'அம்மா' அமைப்பின் வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சிலர் (சரியாகச் சொன்னால் 10 முதல் 15 உறுப்பினர்கள்), எங்கள் நிர்வாகக் குழுவின் ராஜினாமாவிற்கான முன்-தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் வந்தனர்.

நிர்வாகக் குழுவிற்கு எதிராகப் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு தீர்மானத்தை அவர்கள் முன்பே அச்சிட்டுத் தயாரித்து, உறுப்பினர்களுக்கு விநியோகித்தனர். அந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் எங்களிடம் உண்மையான மற்றும் சட்டரீதியாகத் தெளிவான பதில்கள் இருந்தன.

அந்தத் தீர்மானம் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், 'அம்மா' அமைப்பின் விதிமுறைப்படி அது நிறைவேற்றப்படவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட 243 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையானோரின் (அதாவது 162 உறுப்பினர்களின்) ஆதரவைப் பெறாததால், அந்தத் தீர்மானத்திற்குச் சட்டப்பூர்வமான செல்லுபடியாகும் தன்மை இல்லை.

எனது அமைதியைப் பயன்படுத்தி, சுயநலம் கொண்ட சிலர் 'அம்மா' அமைப்பின் உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தி, அமைப்பைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 'அம்மா' அமைப்பை யாரையும் கைப்பற்ற நான் அனுமதிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !