உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2031ல் நடக்கப்போவது சட்டசபைத் தேர்தலா, நடிகர் சங்கத் தேர்தலா?

2031ல் நடக்கப்போவது சட்டசபைத் தேர்தலா, நடிகர் சங்கத் தேர்தலா?


'உசுப்பேத்துறவனுககிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவனுக கிட்ட கம்முன்னும் இருந்தா லைப் ஜம்முன்னு இருக்கும்' என்று விஜய், முன்ன ஒரு சமயத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட டயலாக்கை, இன்று தனுஷ் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளவேண்டிய நேரம் வந்திருக்கிறது.

ஆனால், அவரது நாக்கில் 'அடுத்த முதல்வர்' தேன் தடவப்பட்டு சுற்றி இருப்பவர்கள், அவரது அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறப்போகிறார்கள் என்கிற அளவுக்கு எங்கேயோ போய்விட்டார்கள்.

போதாக்குறைக்கு விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் என்று அறியப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்,…கோச்சார கிரகநிலைப்படி தனுஷ் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அப்படி அவர் வரும்போது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் இருக்காது. 2031 தேர்தலில் போட்டி என்பது விஜய்க்கும் தனுஷூக்கும் மத்தியில் தான் இருக்கும் என்று ஒரு நாட்டு வெடிகுண்டையே போட்டுள்ளார். பண்டிட் வெற்றிவேல் பேசிய அதே விழாவில் பிரபல ஜோதிடர் ஷெல்வியும் தனுஷின் ஜாதகப்படி அவரது அரசியல் வருகை நிச்சயம் இருக்கும் என்று வழிமொழிகிறார்.

இப்படி உசுப்பேற்றப்படுவதால், சமீப காலங்களில் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் விஜய் ஸ்டைலில் குட்டிக் கதைகள் சொல்லத் துவங்கியிருக்கிறார் தனுஷ். முன்னாள் மாமனார் ரஜினி ரசிகர்கள் எப்போதும் விஜய்க்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களது ஓட்டு தனக்கு விழும் என்பதுவும் தனுஷின் கணக்கு.

மேலும் வரும் தேர்தலுக்கு முன், விஜய்யின் 'சர்கார்', 'கோட்', 'ஜனநாயகன்' போன்ற சில அரசியல் படங்களில் நடித்துவிட்டால் வெற்றி நிச்சயம் என்று அவர் நம்புவதாகவும் அதன் முதல் துவக்கமே வெற்றிமாறனுடன் திடீர் அவசரமாக அறிவிக்கப்பட்ட 'தமிழ் முருகன்' பாலிடிக்ஸ் படம் என்கிறார்கள்.

விஜய்யின் வெற்றியையே திராவிடக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் தனுஷின் என்ட்ரி என்பது அவர்களைப் பொறுத்தவரை 'என்ன கொடுமை சரவணா இது?'வே தான்.

ஆனால் கொடுமை தனுஷோடு நிற்கப்போவதில்லை. அடுத்த முதல்வர் கனவோடு திரைத்துறையில் இன்னும் சிலர் களம் இறங்கவிருக்கிறார்கள் என்பதுதான் நிஜகள கலவரம்.

இந்தப் பட்டியலில் தனுஷூக்கு அடுத்தபடியாக ஆர்வத்துடிப்புடன் இருப்பவர் விஷால். அடுத்த தேர்தலில் மகுடம் சூட்டும் முடிவோடு தனது அடுத்த படத்துக்கு 'மகுடம்' என்றே பெயர் சூட்டியிருக்கும் இவர், தனக்கு 2026 தேர்தலிலேயே மாபெரும் அரசியல் ஆபர் வந்ததாகவும் தனது திருமணம் தள்ளிப்போய்க்கொண்டேயிருப்பதாலும் நடிகர் சங்கக் கட்டடப்பணிகள் முடியாததாலும் அந்த ஆபரை கனத்த மனதோடு மறுத்ததாகக் கூறுகிறார்.

அவர் சொல்வதை சரியாகப் புரிந்துகொண்டால், அதாகப்பட்டது தனக்கு வந்த ஆபரை அவர் ஒருவேளை ஏற்றுக்கொண்டிருந்தால், 'ச. ஜோசப் விஜய்' ஆகிய நான் என்பதற்குப் பதிலாக 'விஷாலாகிய நான்' என்கிற தலைப்புச் செய்திகளை தமிழகம் படிக்க வேண்டியிருந்திருக்கும் என்கிறார். இந்த செய்தியைப் படிக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். வாழ்க்கையில எவ்வளவோ பாத்துட்டோம். இது இன்னொன்னு என்று கடந்துபோக வேண்டியதுதான்.

அப்படி துரதிர்ஷ்டவசமாக 2026ல் மிஸ் பண்ணிய ட்ரெயினை 2031ல் பிடித்தே தீருவது என்பதுதான் விஷாலின் தற்போதைய லட்சியமே. கலந்துகொள்கிற மேடை நிகழ்ச்சிகள் அத்தனையிலும் கொஞ்சமும் கூச்சமின்றி விஷாலே இதைச் சொல்லிவருவதால் அவரை நாம் வருங்கால அரசியல்வாதியாக அடுத்த தேர்தல் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது நியாயமாகாது.

அடுத்த முதல்வர் கனவில் சில ஸ்டெப்கள் எடுத்து வைத்துக்கொண்டிருப்பவர் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ். விஜய் கட்சியில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக களம் இறங்கி அரசியல் பயிற்சி எடுத்து அடுத்த தேர்தலில் தனி முயற்சி எடுக்கலாம் என்று இவர் தீட்டியிருந்த திட்டம் தவெக தலைவரால் தவிடுபொடியாக்கப்பட்ட நிலையில் தனது அறக்கட்டளை சேவைகளை இன்னும் அதிகமாக விளம்பரப்படுத்தி தனித்து களம் காண இருக்கிறார் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் உதயநிதியை உதாசீனம் செய்வது, ஏற்கனவே நொந்துபோய் இருக்கிற திராவிடக்கட்சிகளுக்கு செய்கிற துரோகம் ஆகிவிடும். ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் ஒரு முழுநேர நடிகராக களம் இறங்கவிருக்கிறார் உதயநிதி.

அடுத்த தேர்தலில் விஜய்யை எதிர்கொள்வதற்கு திராவிட மாடல் அடையாளத்தை விட வெற்றிகரமான நடிகர் என்கிற இமேஜ் இன்னும் கூடுதலாக கைகொடுக்கும் என்பது அவரது விசுவாசிகள், ஐ.டி விங்கர்களின் புதிய கண்டுபிடிப்பு. எனவே உதயநிதி, இன்னொரு சிறிய ஓய்வுக்குப் பின் மாரி செல்வராஜூடன் 'மாமன்னன் பார்ட் 2' தொடங்கி, அடுத்து வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் ஆகியோர் இயக்கங்களில் நடித்தால் தனது ஸ்டார் அந்தஸ்து உயரும் என்பது அவரது கணக்கு.

இவர்கள் தவிர நடிகர்கள் தரப்பில் இன்னும் சில ஷாக்குகளை அடுத்த தமிழக தேர்தல் எதிர்கொள்ள நேரிடும். அடுத்து இரண்டு, மூன்று படங்கள் நடித்த பின்னர் அஜித் தனது ரசிகர் மன்றங்களை ரீ ஓபன் பண்ணக்கூடும் என்கிறார்கள். பிரசாந்த் அடிக்கடி ரத்த தானம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் தனது பிறந்த நாளன்று சென்னை முழுக்க இலவச தண்ணீர்த் தொட்டிகள் திறந்து வைக்கிறார்.

இதையொட்டி சமூக வலைதளங்களில்,… 'ஐயா 2031ல் நடக்கப்போறது சட்டசபைத் தேர்தலா, இல்லை நடிகர் சங்கத்தேர்தலா?' என்றொரு நக்கலான கேள்வியும் நடமாடுகிறது.

நடிகர்கள் பட்டியலில் இல்லாத 'வி த லீடர்ஸ்' அண்ணாமலையும், நா.த.க. சீமானும் அடுத்த முறை இன்னும் கொஞ்சம் உக்கிரமாக களமாடுவார்கள்.

இவர்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்த தேர்தலுக்குத்தான் இன்னும் அஞ்சு வருசம் இருக்கே. அதுக்குள்ள, சாயந்திரம் 6 மணியானா வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிருவான் மாதிரி, யுடியூப் சேனல்களும் மீடியாக்களும் அடுத்தடுத்த ஸ்கூப் செய்திகளைப் போட்டு மக்களை பரபரப்பு மோடிலேயே வைத்திருப்பதை என்னவென்று சொல்வதய்யா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !