தேசிய விருது சர்ச்சை, குற்றச்சாட்டு : தேசிய விருது பெற்ற இமான் விளக்கம்
கிருஷ்ண பலராம் இயக்கத்தில் பிக்பாஸ் முகேன், தன்யா ஹோப், ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் உருவாகும் படம் நிறம். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இமான் பேசுகையில் ''ஒரு இசை நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக பாடிய பிரவஸ்தியை இந்த படத்தில் ஒரு பாடல் பாட வைத்துள்ளேன். விவேகா, பா.விஜய் பாடல்களை எழுதியுள்ளனர். நம் மாநிலத்துக்கு தேசிய விருது கிடைத்தால், அதை நம் அங்கீகாரமாக பார்க்கணும். ஒரு படைப்புக்கு கிடைக்கும் விருதாக பார்க்காமல், ஒருவரின் உழைப்பு, அவங்க பயணத்தை பார்த்து அந்த விருதை மதிப்பிடணும். விருது குறித்து மாற்று கருத்து இருக்கும். அது வந்துகொண்டே இருக்கும்.
தேசிய விருதை தமிழர்களின் சாதனையாக, நம் சினிமா பெருமையாக பார்க்கணும். நம் மாநிலத்துக்கு அந்த விருது கிடைத்து இருக்கலாம். நம் நடுவர்கள் பேசி வாங்கியிருக்கலாம் என பலர் குறை சொல்கிறார்கள். நடுவர்கள் மீது குறை இல்லை. முதலில் தகுதியான படங்களை விருதுக்கு அனுப்ப வேண்டும். தவிர அந்த நடுவர்கள் நம்ம மாநில நடுவர்கள் மட்டும் அல்ல, அந்த விருதுக்கான நடுவர்கள், விருது போட்டியில் பல கட்டம் இருக்கிறது. அதனால், நம் நடுவர்களை குற்றம் சொல்வது சரியாக இருக்ககாது'' என்றார்.
முகேன் பேசுகையில், ‛‛பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற்றதால் பிரபலம் ஆனேன். அடுத்து சில படங்களில் நடித்தேன். இப்போதும் பாடல்கள் உருவாக்கம், நடிப்பு என பிஸியாக இருக்கிறேன். தமிழகம், மலேசியாவில் மாறி, மாறி வசிக்கிறேன். காலம்தான் மனிதர்களை நகர்த்துகிறது. இப்போது சோஷியல் மீடியா தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல விஷயங்கள் அதில் வருகிறது. நான் பாடல்களை உருவாக்குவது பலருக்கு தெரியவில்லை. பாடல் வெளியானபின் எப்போது ரிலீஸ் என கேட்கிறார்கள். நான் இப்போது 2, 3 படங்களில் நடித்து வருகிறேன். தவிர்க்க முடியாத காரணங்களால் சில படங்கள் தாமதம் ஆகின்றன. அடுத்தடுத்த அப்டேட் வரும்'' என்றார்