ஐமேக்ஸில் வெளியாகும் சூரியின் ‛மண்டாடி'
ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மண்டாடி'. மதிமாறன் புகழேந்தி இயக்கி உள்ளார். மேலும் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. செப்., 10ம் தேதி படம் வெளியாகும் சூழலில் இதனை ஐமேக்ஸ் திரையிலும் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
மதிமாறன் புகழேந்தி கூறுகையில், “மண்டாடி திரைப்படத்தின் தொழில்நுட்ப பிரமாண்டத்திற்கும் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய திரையரங்க அனுபவம் தேவைப்பட்டது. நடிகர் சூரி, டூப் கலைஞர்களின் உதவியின்றி ஆபத்தான கடல் சாகசக் காட்சிகளில் நடிப்பதற்காக கடுமையான பாய்மரப் படகு பயிற்சியை மேற்கொண்டார். ஐமேக்ஸ் வெளியீட்டின் மூலம் கடல் நீரின் கொந்தளிப்பு முதல் கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் வரை ஒவ்வொரு நுணுக்கத்தையும் அதன் முழுமையான பிரமாண்டத்தில் ரசிகர்கள் அனுபவிக்க முடியும்” என்றார்.