ஷாருக்கானால் வெளியான படம் : லாபம் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு
சில மாதங்களுக்கு முன்பு மராத்தியில் உருவாகி இருந்த தேவூல் பந்த் 2 என்கிற படம் ஷாருக்கானுக்கு சொந்தமான ரெட் சில்லி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தில் தங்களது டிஜிட்டல் பணிகளை மேற்கொண்டிருந்தது. 12 லட்சம் கட்டணம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 லட்சம் ரூபாய் செலவானது. படத்தை ரிலீஸ் செய்ய அவர்கள் சிரமப்படுவதை அறிந்த ஷாருக்கான் 42 லட்சம் ரூபாயையும் தள்ளுபடி செய்து அவர்களுக்கு என்ஒசி வழங்கும்படி பெருந்தன்மையுடன் கூறிவிட்டார். அதன்பின் திரையரங்குகளில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தொகை முழுவதையும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக தானமாக வழங்கியுள்ளனர் படக்குழுவினர். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகளின் கல்வியை தொடரவும் சுமார் 250 குழந்தைகளுக்கு தொடர்ந்து இருவேளை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் இந்த லாபத் தொகை பயன்படுத்தப்பட்டு வருவதாக படத்தின் இயக்குனர் பிரவீன் தார்டே நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.