உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள திரையுலகம் எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது : கைரா வாசுதேவன்

மலையாள திரையுலகம் எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது : கைரா வாசுதேவன்

பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'கலீபா' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார் கைரா வாசுதேவன். மாடல் அழகியான இவர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களின் ஆல்பங்களில் ஆடியுள்ளார். முன்னணி மாடல் அழகியாகவும் இருந்தார். கலீபாவின் வெற்றிக்கு பிறகு தமிழ் வாய்ப்புகளும் வரத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கைரா வாசுதேவன் கூறும்போது “பிரித்விராஜ் சுகுமாரன் - இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி.ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து எனது முதல் மலையாள படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். 'கலீபா' படப்பிடிப்பு தளம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இடமாக அமைந்தது. குறிப்பாக திரைப்பட தயாரிப்பின் தொழில்நுட்ப அம்சங்களையும், நடிப்பின் நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள இயக்குநர் வைசாக் உதவினார். ஒவ்வொரு நாளும் நான் புதிதாக ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் ஆக் ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். முதல்முறையாக சண்டைக் காட்சியில் நடித்தபோது நான் மிகவும் பதற்றம் அடைந்தேன். பிரித்விராஜுடன் இணைந்து எனது திரை பயணத்தை தொடங்கியதை நான் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. அதனால் என்னுடைய முழு ஆற்றலையும், 200 சதவீதம் வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு நிறைவான நியாயம் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும் மலையாளத் துறையிலும் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வேன். மலையாள திரையுலகம் எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது. மீண்டும் மீண்டும் இங்கு வந்து பல திரைப்படங்களில் பணியாற்றவே நான் விரும்புவேன், இது எனக்கு ஒரு வீடு போன்றது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !