நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோனு சூட் நேரில் சென்று உதவி
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்த நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் பலர் வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். பொதுவாக இது போன்ற இக்கட்டான தருணங்களில் உதவிக்கரம் நீட்டக்கூடிய பாலிவுட் நடிகர் சோனு சூட் தற்போது நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுக்கு சென்று மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட திரிசூலி பஜார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது தனது அறக்கட்டளை சார்பாக இந்தியாவிலிருந்து கொண்டு வந்த உணவுப் பொருள்கள், போர்வைகள் மற்றும் அத்தியாவசியமான பொருட்களை தனது குழுவுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். மேலும் களத்தில் உள்ள மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்கு ஏற்ப இன்னும் இந்தியாவிலிருந்து உதவிகளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளாதாக கூறியுள்ளார்.. இது தற்காலிகமான உதவி அல்ல என்றும் இந்த மாதம் மட்டுமல்லாமல் வரும் மாதங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தனது உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் சோனு சூட் உறுதியளித்துள்ளார்.