உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? இயக்குனரை மிரட்டிய நடிகர் ஜெயசூர்யா

படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? இயக்குனரை மிரட்டிய நடிகர் ஜெயசூர்யா

மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயசூர்யா. செலக்ட்டிவ்வான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் இவர், தற்போது 'கத்தனார்' என்கிற வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடித்து வருகிறார். 'ஹோம்' என்ற தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குனர் ரோஜின் தாமஸ் இயக்குகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கோகுலம் மூவிஸ் தயாரிக்க, நடிகை அனுஷ்கா முதல் முறையாக இந்த படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைக்கிறார். பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு விட்டு விட்டு நடைபெறுகிறது. அதேசமயம் இதற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசூர்யாவின் 'ஆடு 3' திரைப்படம் வெளியாகி 100 கோடி வசூலித்தது. அதன் பிறகு ஒப்புக்கொண்டு நடித்த 'ஆபரேஷன் டிரால்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தான் நடிகர் ஜெயசூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் ரோஜின் தாமஸிடம் கேக் வெட்ட உதவும் கத்தியை காட்டி மிரட்டும் இரண்டு புகைப்படங்களையும், அதன் கூடவே கத்தனார் படத்தை எப்போது ரிலீஸ் செய்யப் போகிறீர்களா? இல்லை இந்த கத்தியை நான் ரிலீஸ் செய்யட்டுமா? என்று வேடிக்கையாக கேட்பது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த பட ரிலீஸ் குறித்த ரசிகர்களின் மனநிலையைத்தான் அவர் இப்படி கேள்வியாக எழுப்பியுள்ளார். அதற்கு இயக்குனர் ரோஜின் தாமஸ் அதே பாணியில் நகைச்சுவையுடன், இப்போதைக்கு ரிலீஸ் தேதியை வெளிப்படுத்த முடியாது, விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !