உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகையிடம் 3 கோடி நஷ்ட ஈடு கேட்டு விமான நிறுவனம் வழக்கு

நடிகையிடம் 3 கோடி நஷ்ட ஈடு கேட்டு விமான நிறுவனம் வழக்கு


பாலிவுட் நடிகை நோரா பதேஹி படங்களில் நாயகி கதாபாத்திரங்களில் நடித்ததை விட பல படங்களில் ஐட்டம் பாடல்களில் ஆடியதன் மூலம் புகழ்பெற்றவர். இவர் மீது தற்போது டியூன்ஸ் ஏவியேசன் என்கிற விமான நிறுவனம் 3 கோடி நஷ்ட ஈடு கேட்டு உரிமையியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் செப்டம்பர் 25ல் விசாரணைக்கு வருகிறது..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் போது இந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணித்த நோரா பதேஹி, அதன் உட்புறம் இருந்தே வீடியோ பதிவு செய்து பின்னர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அந்த விமானத்தை மினியேச்சர் மற்றும் விளையாட்டுப் பொருள் என்று கேலியாகக் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட நான்கரை கோடி பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் நிலையில், இவரது இந்தப் பொறுப்பற்ற கருத்துக்கள் தங்களது நிறுவனத்தின் பெயருக்குக் கடுமையான களங்கத்தை ஏற்படுத்தியதாகவும், இவரது இந்த செயலால் தங்களது விமானப் பயணப் பதிவுகள் 15 முதல் 20 சதவீதம் வரை சரிந்ததாகவும், புக்கிங் செய்தவர்கள் கேன்சல் செய்வது அதிகரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட விமானம் இந்திய குடிமை விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் முழுமையாகச் சான்றிதழ் பெற்றது என்றும், அனைத்து பாதுகாப்பு விதிகளின் படியும் சட்டப்பூர்வமாக இயக்கப்படுவதாகவும் கூறியுள்ள இந்த நிறுவனம், இந்த பாதிப்புக்கு தங்களுக்கு நஷ்ட ஈடாக மூன்று கோடி வழங்குவதுடன், சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இது குறித்து அவர் பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !