உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: திருட்டு கதைக்கு 2 தேசிய விருது

பிளாஷ்பேக்: திருட்டு கதைக்கு 2 தேசிய விருது


பிற்காலத்தில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி புகழ்பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய முதல் படம் 'சாரதா'. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

1962ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது, மற்றும் சிறந்த படத்திற்கான 2வது பரிசு என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது. அதே நேரத்தில் இந்த படத்தின் கதை எங்களுடையது என்று இரண்டு எழுத்தாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். பிரபல எழுத்தாளர் அகிலன் தனது 'சிநேகிதி' நாவலின் கதை இது என்று வழக்கு தொடர்ந்தார். அவருடன் ஜெயலட்சுமி என்ற எழுத்தாளரும் தனது சிறுகதையை தழுவி படம் எடுக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளில் அகிலன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கில் அவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது.

அப்படி என்ன படத்தின் கதை என்பதை பார்க்கலாம்: பணக்கார பெண்ணான சாரதாவிற்கு (விஜயகுமாரி), வீட்டில் வந்து பாடம் சொல்லி கொடுக்கிறார் ஆசிரியர் சம்பந்தம். இருவருக்கும் காதல் உருவாகிறது. தந்தையின் (எஸ். வி. ரங்காராவ்) எதிர்ப்பை மீறி அவரையே திருமணம் செய்து கொள்கிறார், சாரதா. திருமணத்துக்குப் பிறகே தன் கணவனால் தாம்பத்ய வாழ்கையில் ஈடுபட இயலாது என உணர்கிறாள். அவனுக்கு ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட நிலை என உணர்ந்து, அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்கிறாள்.

தன் கையாலாகாத நிலையை உணர்ந்த கணவன் சம்பந்தம், சாரதாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புகிறான். சாரதாவிடமிருந்து விவாகரத்து பெற்று, அவளுடைய மாமனையே (எஸ். ஏ. அசோகன்) மணமகனாக்குகிறான் சம்பந்தம். எல்லோரும் ஏற்றுக்கொண்டபோதும், சாரதாவால் இன்னொரு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மரணமடைகிறாள், என்பதுதான் படத்தின் கதை. 'ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன', 'மணமகளே மருமகளே வா வா' என்ற காலத்தால் அழியாத பாடல்கள் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !