உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் உடல்நலக் குறைவுக்கு பிரபாஸ் படக்குழுவினர் காரணம் இல்லை: 'பௌசி' பட நடிகர் விளக்கம்

என் உடல்நலக் குறைவுக்கு பிரபாஸ் படக்குழுவினர் காரணம் இல்லை: 'பௌசி' பட நடிகர் விளக்கம்


ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் 'பௌசி'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற போது, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகரான ராஜேஷ் சர்மா என்பவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் ஏதோ பூச்சி கடித்ததால் அலர்ஜி தோன்றி உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் தனது ஊருக்குக் கிளம்பிச் சென்ற அவர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் இது குறித்து விசாரிக்க தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் கோரிக்கை வைக்கும் அளவிற்கு தற்போது இது சீரியஸாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அந்த உடல்நலப் பிரச்னையிலிருந்து குணமடைந்துள்ள ராஜேஷ் சர்மா, இந்த சம்பவம் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, பிரபாஸ் படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானவை. எனக்கு நீண்ட நாட்களாக வலது காலில் தோல் தொடர்பான பிரச்சனை இருந்தது. சர்க்கரை நோய் அளவு மிகவும் அதிகமாக இருந்ததை ஆரம்பத்தில் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததே நிலைமை மோசமாகக் காரணம் என்று கூறியுள்ளார்.

இவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான சுதிபா சாட்டர்ஜி என்பவர், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் ஏதோ பூச்சி கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டதுதான் இந்த அளவிற்குப் பிரச்சனை சீரியஸ் ஆகக் காரணம் என்றும் கூறியுள்ள ராஜேஷ் சர்மா, தன் மீதான கவலையால் அவர் தவறான தகவல்களைப் பரப்பிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். தற்போது உடல்நிலை தேறியுள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்புக்குத் திரும்புவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !