ஒரே வாரத்தில் இரண்டு படங்களில் பிரியங்கா மோகன்
தமிழ் சினிமா உலகில் புதிய நடிகைகள் வருவதும், போவதுமாக இருப்பதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து நீண்ட வருடங்கள் தாக்குப் பிடிக்கிறார்கள். சிலர் சினிமா அரசியலில் சிக்கியும், தோல்விப் படங்களில் நடித்தும் காணாமல் போய் விடுகிறார்கள்.
சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வருடமாக பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரியங்கா மோகன். அவர் மீது சில தனிப்பட்ட தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட சில ஆபாசப் புகைப்படங்களைக் கூட சிலர் பதிவிட்டார்கள். அது குறித்து பிரியங்கா மோகனும் கண்ணியமான கருத்தை முன் வைத்திருந்தார்.
பிரியங்கா மோகனுக்கான எதிர்கால சினிமா வாய்ப்புகள் குறித்தும் அப்போது ஒரு கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது சில புதிய பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்துள்ளன. கவின் நடிக்கும் படம் ஒன்றில் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் 29வது படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கும் 'மஞ்சணத்தி' படத்திலும் பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் பூஜை இந்த வாரம் தான் நடைபெற்றது. ஒரே வாரத்தில் இரண்டு படங்கள் அவருக்கு ஆரம்பமாகி உள்ளன.
'டான்' படத்திற்குப் பிறகு அவர் நடித்த 'கேப்டன் மில்லர், பிரதர்' ஆகிய படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இந்த வருடத்தில் அவர் நடித்த 'மேட் இன் கொரியா' படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போதைய புதிய படங்கள் பிரியங்காவுக்கு திருப்புமுனையைத் தர வாய்ப்புள்ளது.