நிகிலா விமலுக்கு கை கொடுக்குமா தூமகேது ?
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகை நிகிலா விமல், 'வெற்றிவேல்', 'கிடாரி' என ஆரம்பத்திலேயே வெற்றிப் படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்திலும் தமிழிலும் மாறி மாறி நடித்தாலும், கடந்த 2024-ல் குருவாயூர் அம்பலநடையில் மற்றும் தமிழில் வெளியான 'வாழை' ஆகிய படங்களின் வெற்றி மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். ஆனால், கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான படங்கள் அவருக்குச் சொல்லிக் கொள்ளும் படியாக அமையவில்லை. இந்த வருடத் துவக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பெண்ணு கேஸ்' மற்றும் 'அனந்தன் காடு' இரண்டு படங்களும் அவருக்குச் சிறப்பாக அமையவில்லை.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'தூமகேது' என்கிற படத்தில் நடித்துள்ளார் நிகிலா விமல். வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. சுதி மேடிசன் இயக்கியுள்ளார். இதில் 'ஆவேசம்' புகழ் சஜின் கோபு, வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீருக்கு அடியில் நிகிலா விமலை வைத்து எடுக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் நிகிலா விமலுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.