மொழி குறித்து சர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்
கன்னட ஸ்டார் சிவராஜ் குமார் தற்போது நடித்து வரும் படம் 'ஒரிஜினல் மான்ஸ்டர்'. இப்படம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. மற்ற மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்த படம் சிவராஜ்குமார் நடிக்கும் முதல் ஹிந்திப் படமாகும். இதில் சிவராஜ்குமார் ஹிந்தியில் பேசி நடித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவராஜ்குமாரிடம் ஹிந்தியில் பேசி நடிப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஹிந்தி எனது இரண்டாவது மொழி. என்னால் ஹிந்தி பேச முடியும். அது ஒரு எளிதான மொழி, நாட்டின் தேசிய மொழி. அது எங்களுக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்? தெரியும்” என்றார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 'இந்தியாவில் எல்லா மொழிக்கும் சம உரிமை உண்டு. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி ஹிந்தி, ஆனால் தேசிய மொழியல்ல' என்று கன்னட மொழி ஆர்வலர்கள் சிவராஜ் குமாருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது பேச்சிற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். பெங்களூருவில் நடந்த 'ஒரிஜினல் மான்ஸ்டர்' படத்தின் புரொமோஷன் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஹிந்தியை 'தேசிய மொழி' என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அது பல மொழிகளில் ஒன்றுதான். எங்கள் மொழியான கன்னடம் எங்களுக்கு எப்போதும் முக்கியமானது. நான் தவறாகக் குறிப்பிட்டதால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய மொழி ஹிந்தி, எங்களுடையது கன்னடம். அவர்களுக்கு அவர்களுடைய மொழி எந்த அளவு முக்கியமோ அதேபோல, எங்களுக்கு எங்கள் மொழி முக்கியம்” என்றார்.