விஸ்வாம்பரா வெளியீட்டுப் பிரச்னையை தீர்க்க சிரஞ்சீவியை அணுகிய தயாரிப்பாளர்கள்
தெலுங்கில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் விஸ்வாம்பரா. இதில் த்ரிஷா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மவுனி ராய் ஒரு சிறப்புப் பாடலில் தோன்றுகிறார். இப்படம் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து வருகிறது. ஆனால் இதுவரை அதன் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு, இப்படத்தின் விரிவான கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் பணிகளே இந்த தாமதத்திற்கு காரணம் என்று படக்குழு தெரிவித்தது. இந்நிலையில், தியேட்டர் வெளியீட்டு தேதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தயாரிப்பாளர்களுக்கு மற்றுமொரு பிரச்னையை உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் உரிமைகளுக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு முன், படத்தின் வெளியீட்டுத் திட்டம் குறித்து தெளிவுபடுத்துமாறு ஓடிடி தளங்கள் கேட்டு வருகின்றன.
தற்போது சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கூட்டணியில் உருவாகும் காக்கா என்ற படம் ஏற்கனவே 2027 ஜனவரி 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதன் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தை சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு முன் விஸ்வாம்பரா வெளியாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்தப் பிரச்சனை தொடர்வதால், வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய சிரஞ்சீவியின் தலையீட்டையும் உதவியையும் கோரி தயாரிப்பாளர்கள் தற்போது அவரை அணுகியுள்ளனர்.