நடிகர் சங்கத்திற்கு என சிறப்பு நீதிமன்றம் அமைத்து விடலாமா ? ; உயர்நீதிமன்றம் கேள்வி
மலையாளத் திரை உலகில் 'அம்மா' (AMMA) என்கிற பெயரில் நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, ஒரு பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்திற்குள் மிகப்பெரிய அளவில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. நிர்வாகிகளாக இருப்பவர்களே ஒருவர் மாறி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
குறிப்பாக, நடிகை ஸ்வேதா மேனன், திரிஷ்யம் நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகை சாந்தி ப்ரியா ஆகியோர் தொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் அன்சிபா ஹாசன் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பொதுமக்களின் எண்ணற்ற முக்கியமான வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, நடிகர் சங்கத்திற்குள் நடக்கும் முடிவில்லாத சண்டைகளைக் கவனிக்க தனியாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தைத் தொடங்க வேண்டுமா? என்று கிண்டலாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அந்த அளவிற்கு நடிகர் சங்கத்தின் பிரச்னைகள் முற்றிவருகின்றன என்பதை நீதிபதியின் இந்தக் கருத்து உணர்த்துகிறது.