உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி : முதல்வர் விஜய் புகழாரம்

தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி : முதல்வர் விஜய் புகழாரம்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நடிப்புக்கே சக்கரவர்த்தியாக, நடிப்புக்கே இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். சிவாஜி வேறு நடிப்பு வேறு கிடையாது. ஈருடல் ஓர் உயிர் என்பார்கள். அதுபோல் சிவாஜியும், நடிப்பும் ஒன்றே... இந்த மாபெரும் கலைஞனான சிவாஜியின் 99வது பிறந்த தினம் இன்று. அவருக்கு முதல்வர் விஜய் புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், ‛‛தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.

அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோது சிவாஜி உடன் ‛ஒன்ஸ்மோர்' (1997ம் ஆண்டு) என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !