ஏஐ.,யால் மனிதனின் படைப்பாற்றலை மாற்ற முடியாது - சோபிதா
தமிழில் ‛பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சோபிதா துலிபாலா. தற்போது ‛வேட்டுவம்' படத்தில் நடித்து வருகிறார். தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய சாதனமாக பயன்படும் ஏஐ., குறித்து பேசி உள்ளார்.
இதுபற்றி சோபிதா கூறுகையில், ‛‛நான் மட்டுமல்ல இன்று உலகமே பெரும்பாலும் ஏஐ., தொழில்நுட்பத்தில் மூழ்கி கிடக்கிறோம். நான் இப்போது ‛சாட்ஜிபிடி' உடன் மிகவும் நெருக்கமாகி விட்டேன். ஏஐ.,யின் பயன்பாட்டால் அன்றாட வாழ்க்கையில் கூட சிலர் அவர்களது முக்கியமான விஷயங்களை கூட நேரம் ஒதுக்கி செயல்பட முடியவில்லை. இது சரியா, தவறா என தெரியவில்லை. என்னை பொருத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் அளவாக பயன்படுத்தினால் பிரச்னை இல்லை. அதில் எல்லை தாண்டக்கூடாது. என்னதான் ஏஐ., ஆட்டோமோஷன் என தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்தாலும், கொண்டாடப்பட்டாலும் மனிதர்களின் தனித்துவமான படைப்பாற்றலை தொழில்நுட்பத்தால் ஒருபோதும் மாற்ற முடியாது என்று நம்புகிறேன்'' என்றார்.