எனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை! - ஐ.டி ரெய்டு குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்!
சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகளுடன் தன்னைத் தொடர்புபடுத்தி வெளியான செய்திகள் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளார். தன் மீது பரப்பப்படும் செய்திகளை மறுத்துள்ள அவர், அதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. உண்மைகளைச் சரிபார்க்காமல் இந்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ராணுவப் பின்னணியில் இருந்து வந்தவர் என்றும், கடும் உழைப்பால் மட்டுமே தனது வாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தான் 20 வயதிலிருந்தே முறைப்படி வரி செலுத்தி வருவதாகவும், தனிப்பட்ட முறையிலோ அல்லது எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலோ சட்டவிரோத வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார். அதேபோல், இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ யாருக்காகவும் எந்தவொரு பினாமி சொத்தையும் தான் வைத்திருக்கவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பொய்யான, தீங்கிழைக்கும் மற்றும் ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளை வெளியிட்டவர்கள் அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற்று, உண்மைகளைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ரகுல் ப்ரீத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களின் வணிக ரீதியிலான அழுத்தங்கள், ஒருவரின் உண்மைத்தன்மை, நற்பெயர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விரிவான அறிக்கையின் மூலம், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ரகுல் ப்ரீத் சிங் தனது தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்து தெளிவுபடுத்தியுள்ளார்.