உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சக்சஸ் மீட்: நேற்று 'பத்தா', இன்று 'அன்பில் அவன்'

சக்சஸ் மீட்: நேற்று 'பத்தா', இன்று 'அன்பில் அவன்'


அக்டோபர் 1ம் தேதி வெளியான விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'பத்தா' திரைப்படத்திற்கு நேற்று சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினார்கள். அக்டோபர் 2ம் தேதி வெளியான அசோக் செல்வன் நடித்து வெளிவந்த 'அன்பில் அவன்' படத்திற்கு இன்று சக்சஸ் மீட் வைத்து கொண்டாடி உள்ளார்கள்.

'பத்தா' படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக பெரிய வசூலைக் குவிக்கவில்லை. இதுவரையிலும் சுமார் 10 முதல் 15 கோடி வசூலித்திருக்கலாம் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேற்று சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அட்லி பேசுகையில் கூட 'பத்தா' படத்தை இன்னும் நான்கைந்து வாரங்கள் ஓட வைக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பதையும் திரையுலகில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

'அன்பில் அவன்' படத்திற்கு விமர்சன ரீதியாக முதல் பாதி படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, இரண்டாவது பாதிக்குக் கிடைக்கவில்லை. இப்படம் சுமார் 3 கோடிக்கும் குறைவாகவே இதுவரையில் வசூலித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இருப்பினும் இன்று இரவு படத்தின் சக்சஸ் மீட் நடக்க உள்ளது. இந்தப் படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை, ஓடிடி உரிமை ஆகியவை ஏற்கெனவே நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் படங்கள் வெளியாகும் போது அது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படம், சக்சஸ் மீட் நடத்திய படம் என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்கு மட்டுமே இப்படியான சக்சஸ் மீட்கள் நடைபெறுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !