உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பார்டர்-2' சாதனையை முறியடித்தது 'ஹனுமான் அன்ஷ்'! 2026ன் 2வது அதிக வசூல் ஈட்டிய உள்நாட்டுப் படமானது!

'பார்டர்-2' சாதனையை முறியடித்தது 'ஹனுமான் அன்ஷ்'! 2026ன் 2வது அதிக வசூல் ஈட்டிய உள்நாட்டுப் படமானது!


ஹிந்தியில் விஷால் சதுர்வேதி இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வந்த படம் 'ஹனுமான் அன்ஸ்'. இப்படம் சன்னி தியோல் நடிப்பில் வெளியான 'பார்டர் 2' படத்தின் உள்நாட்டு வசூல் சாதனையை முறியடித்து 2026ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக உருவெடுத்துள்ளது. இந்த பக்தி- படம் தற்போது 'துரந்தர்: தி ரெவெஞ்ச்' படத்திற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஹனுமான் அன்ஷ் படத்தின் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 329.61 கோடியைக் கடந்துள்ளது. இதற்கிடையில், வெளிநாட்டு வசூல் தற்போது ரூ. 40 கோடியாக உள்ளது. இப்படம் சமீபத்தில் தெலுங்கு டப்பிங் பதிப்பிலும் வெளியிடப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரூ.0.15 கோடியை வசூலித்துள்ளது.

சுமார் ரூ.2 கோடி என்ற குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஹனுமான் அன்ஷ் படம் அனைத்து வர்த்தக எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி, எதிர்வரும் ஆண்டுகளில் நடுத்தர பட்ஜெட் பக்தித் திரைப்படங்களின் புதிய டிரெண்டை தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் ரூ. 10.50 கோடி நெட் வசூலுடன், அனைத்து காலத்திலும் 9வது வாரத்தில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற புதிய சாதனையை இப்படம் படைத்தது. தெலுங்கு வெளியீட்டு முடிவு தயாரிப்பாளர்களுக்கு மற்றொரு சிறந்த முடிவாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹனுமான் அன்ஷ் படம், மகாராஜ்ஜி என்று பிரபலமாக அறியப்படும் நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தின் அபார வெற்றியால், மகாராஜ்ஜியுடன் பெரிதும் தொடர்புடைய கெய்ச்சி தாம் பகுதிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் சந்தன் கே ஆனந்த், சோபினா சத்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், நிகில் துபே, உதய்சிங் ராஜ்புத், பூர்ணிமா திவாரி, மனிஷ் சவுத்ரி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !