உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருநங்கைகளை கொச்சைப்படுத்துவது மனரீதியான வன்முறை : மோகன்ஜிக்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்

திருநங்கைகளை கொச்சைப்படுத்துவது மனரீதியான வன்முறை : மோகன்ஜிக்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'டோரத்தி' படத்தின் வெளியிட்டுக்கு பிறகு திருநர் மற்றும் திருநங்கை குறித்த விவாதங்கள் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இயக்குனர் மோகன் ஜி அளித்த ஒரு பேட்டியில் தன் எதிரே இருந்த ஒரு திருநங்கையிடம் நீங்கள் திருமணம் செய்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?. 'டோரதி' 2ம் பாகம் எடுத்தால் அவர்கள் எப்படி வாழ்வார்கள், என்ன செய்வார்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: 'டோரதி' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதே நேரம் இந்த படம் வெளியாகும் முன்பும் சரி, வெளியான பிறகும் சரி நிறைய வெறுப்பு பிரசாரங்களை பார்க்க முடிந்தது. ஒரு தரப்பு குறிவைத்து இந்த வெறுப்பை பரப்பி வந்தனர். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நேற்று என் குழுவில் இருந்து ஒரு வீடியோ காண்பித்தனர். அதை பார்த்ததும் எனக்கு மிகவும் வேதனையாகவும், கோபமாகவும் இருந்தது.

மோகன் ஜி என்ற ஒரு இயக்குநர் இந்த படத்தை பற்றிய உரையாடலில் எதிரே இருந்த திருநங்கை அக்காவிடம், ''கல்யாணம் பண்ணி நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்று கேட்கிறார். அதற்கு அந்த அக்கா மிகத் தெளிவாக மகிழ்ச்சியாக இருப்போம், அன்பை பகிர்ந்து கொள்வோம் என்று சொல்கிறார். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் கடைசியாக எதை நோக்கி அந்த கேள்வியை கொண்டு செல்ல முயற்சிக்கிறார் என்றால், “உங்களால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?” என்பதுதான் அவருடைய கேள்வியின் நோக்கம்.

அது கேள்வியல்ல. அது ஒரு பயங்கரமான அவமதிப்பு. அதை அந்த திருநங்கை அக்காவின் முகத்துக்கு நேரே ஒரு யூடியூப் சேனலில் அவர் முன்வைக்கிறார். அதை பார்க்கும்போது அது திருநங்கைகளின் மீதான மனரீதியான வன்முறையாகவே எனக்கு தோன்றியது. நான் இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

நீங்கள் படத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதைப் பற்றி நான் கவலைக் கூட படமாட்டேன். ஆனால் மனிதம் என்று ஒன்று உள்ளது. திருமணம் என்றாலே குழந்தை பெற்றுக் கொள்வதுதான் வாழ்க்கையின் லட்சியமா? நாய், பன்றி கூடதான் அதையெல்லாம் செய்கிறது. அதுதான் மனிதர்களுக்கான உச்சபட்ச இலக்கா? குழந்தை பெற்றுக் கொள்ளமுடியாதவர்கள் வாழவே தகுதியற்றவர்களா? எப்படி ஒரு மதரீதியான, சாதிரீதியான பேச்சுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளனவோ அதே போல இதற்கும் கொண்டு வரவேண்டும்.

ஏனெனில் பாலின ரீதியாக ஒருவரை அவமதிப்பது மிகவும் தவறான விஷயம். இனி இதை செய்யாதீர்கள். அப்படி செய்வதற்கும் மற்றவர்கள் அனுமதிக்காதீர்கள். இவ்வாறு கார்த்திக் சுப்பராஜ் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !