பிளாஷ்பேக்: மன்னன் ரீமேக்கா, காப்பியா?
சிவாஜி புரொடக்ஷன் சார்பில் பிரபு தயாரித்த படம் 'மன்னன்'. பி.வாசு இயக்கினார், ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு நடித்தனர். இந்த படம் 1986ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த 'அனுராக அரலிது' என்ற படத்தின் ரீமேக். இதில் ராஜ்குமாரும், மாதவியும் நடித்திருந்தனர்.
ஆனால் இந்தப் படம், 1976ம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'கணவன் மனைவி' என்ற படத்தின் காப்பி என்ற பிரச்னை அப்போது எழுந்தது. கணவன் மனைவி படத்தின் கதையை கலைஞானம் எழுதியிருந்தார். அவர்தான் இந்த புகாரையும் சொன்னார். பின்னர் ரஜினி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த பிரச்சினையை அப்போதே விட்டு விட்டார் கலைஞானம்.
'கணவன் மனைவி' படத்தை பீம்சிங் இயக்கினார். முத்துராமன் ஜெயலலிதா, தங்கவேலு சச்சு, சுருளிராஜன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் 'சீதா ராமுலு' என்ற பெயரிலும், இந்தியில் 'ஹெசியத்' என்ற பெயரிலும் ரீமேக் ஆனது.
பணக்கார பெண்ணான ஜெயலலிதா, சாதாரண மனிதரான முத்துராமனை காதலிப்பார். முத்துராமன் தனது நிறுவனத்தில் ஒரு ஊழியர் என்பதை ஜெயலலிதாவும், முத்துராமனும் அறிந்ததும், முத்துராமன் ஜெயலலிதாவின் காதலை நிராகரிக்கிறார். ஆனால் காதலை கைவிட விரும்பாத ஜெயலலிதா, நிறுவனத்தில் ஊழியராகவும், வீட்டில் கணவனாகவும் சுதந்திரமாக இருக்கலாம் என்று சொன்னபிறகு இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகு இருவருக்கும் இடையில் வரும் பிரச்னைகள்தான் படம். கிட்டத்தட்ட 'மன்னன்' படத்தின் கதையும் இதுதான்.