பிளாஷ்பேக்: தமிழில் நாடகமாக நடத்தப்பட்ட இந்திப் படம்
1958ம் ஆண்டு இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'வர்வரிஷ்'. ராஜ்கபூர் நடித்த இந்தப் படத்தை எஸ்.பானர்ஜி இயக்கியிருந்தார். ஒரு பணக்காரரின் மனைவிக்கும், ஒரு பாலியல் தொழிலாளிக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் நடக்கும் எதிர்பாராத விபத்தால் எந்த குழந்தை யாருடையது என்பது தெரியாமல் போகிறது. பணக்காரர் இரண்டு குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பணக்காரரின் இரண்டு மகன்களில் ஒருவன் பாலியல் தொழிலாளிக்குப் பிறந்தவன் என்ற உண்மை ஊருக்குத் தெரிந்த பின், அவரது மகன்களுக்கு பெண் கொடுக்க மற்றவர்கள் மறுக்கிறார்கள். இந்தப் பிரச்சனை கடைசியில் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதான் இந்தி படத்தின் கதை.
இந்தப் படம் தமிழில் 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. பட்டு என்பவர் நாடகத்தை எழுதினார். இந்த நாடகம்தான் 1963ல் 'பார் மகளே பார்' என்ற பெயரில் திரைப்படமானது. இந்த கதையை அப்போது படமாக எடுக்க யாரும் முன்வரவில்லை. காரணம் இந்த கதையில் வரும் பாலியல் தொழிலாளி கேரக்டர் ஒரு உறுத்தலான விஷயமாக பார்க்கப்பட்டது.
ஆனால் பீம்சிங் இதை படமாக்க முன்வந்தார். அப்போது மகன் என்பதை மாற்றி மகள்கள் என ஆக்கினார். அதற்கேற்ற கதையை வலம்புரி சோமநாதன் எழுத, வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார்.
சிவாஜி கணேசன் ஜமீன்தார் சிவலிங்கமாக நடித்திருந்தார். அவரது மனைவியாக சவுகார் ஜானகியும். சிவாஜியின் நண்பராக வி.கே.ராமசாமியும் . மகள்களாக விஜயகுமாரியும், புஷ்பலதாவும் நடித்தனர். அவர்களை காதலிப்பவர்களாக முத்துராமன், ஏவிஎம் ராஜன் நடித்தனர் படமும் பெரிய வெற்றி பெற்றது.