உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛காக்க காக்க' படம் பார்த்தபோது.... சீன் பட விழாவில் கார்த்தி நெகிழ்ச்சி

‛காக்க காக்க' படம் பார்த்தபோது.... சீன் பட விழாவில் கார்த்தி நெகிழ்ச்சி

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடித்த ‛சீன்' படத்தின் டிரைலர் விழா சென்னையில் நடந்தது. இதில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தியும் கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது : ''எப்போதுமே தீபாவளி ரிலீஸ் நமக்கெல்லாம் ரொம்ப ஸ்பெஷல். நான் படித்துவிட்டு உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் தான் 'காக்க காக்க' வெளியானது. சென்னை, கமலா திரையரங்கில் படத்தை பார்க்க சென்றேன். அதற்கு முன் என்னுடைய அண்ணன் படத்திற்கு எப்போது கூட்டம் வரும், எப்போது கைதட்டுவார்கள்... என ஏங்கி இருக்கிறேன். 'காக்க காக்க' படத்தின் சூர்யாவின் இன்ட்ரொடக்ஷன் சீன், 'மாயா' என கத்திக் கொண்டே கீழே விழும் காட்சி, 'உயிரின் உயிரே...' பாடல்... என திரையரங்கமே பிளாஸ்ட் ஆனது போல் கைதட்டினார்கள். அந்த நிமிடத்தில் ஒரு சந்தோஷம் மனசு முழுக்க பரவியது. அந்தப் படத்தில் தான் அண்ணாவை வேற லெவலில் பார்த்தேன்.

அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து நான் 'பிதாமகன்' படம் பார்த்தேன். அதில் 'சத்தியம் தோற்பதில்லை...' என பேசுவார் ஆனால் உண்மையில் அண்ணன் வீட்டில் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். ஆனால் அந்தப் படத்தில் படம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கிறார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் மணிரத்னத்திடம் உதவியாளராக சேருகிறேன். அப்போது அவர் 'ஆயத எழுத்து' படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் கம்ப்ளீட் ஆக வேறு மாதிரியாக இருந்தார். ரொம்ப வருஷத்திற்கு பிறகு அதேபோல் இப்போது அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் கருப்பு பார்த்தோம். அதில் 'காட் மோடில்' இருந்தார். அதன் பிறகு 'விஸ்வநாத் & சன்ஸ்' பார்த்தோம். வேறு யார் இதைப்போல் நடிக்க முடியும்? அழகாக அந்த கதாபாத்திரத்தை ஹேண்டில் செய்திருந்தார். சஞ்சய் ராமசாமியை மறுபடியும் திரையில் பார்த்தது போல் இருந்தது.

தற்போது 'சீன்' திரைப்படம். 'ஆவேஷம்' படத்திற்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் ஜித்து மாதவன். அந்த மாதிரி இருக்குமா? இந்த மாதிரி இருக்குமா? என்ற எதிர்பார்ப்பிற்கு எல்லாம் அப்பாற்பட்டு புது மாதிரியாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். டார்க் ஹியூமரில் ஒரு படத்தை வழங்கி இருக்கிறார். 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டா..' என்பதை டார்க் ஹியூமரில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த படம் பொழுதுபோக்கு அம்சத்துடன் இருக்கிறது. அதிலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளியாவது சிறப்பு.

இந்த படத்தில் இசையமைப்பாளரான சுசின் ஷியாம் தனியாக கோவாவில் அமர்ந்து இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். சமூக ஊடகத்தில் எந்த தொடர்பும் இன்றி இருப்பதால் இவருக்கு 'இசை சித்தர்' என்ற அடைமொழியை கொடுக்கலாம் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் 16 பாடல்கள் இருப்பதாக கேள்விப்படுகிறேன். ஜித்து மாதவன் ஒரு இன்ட்ரோவெர்ட் என சொல்லலாம். எப்போதும் அமைதியாகவே இருப்பார். ஆனால் படத்தில் பட்டாசாக வெடித்திருக்கிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு அந்த பாதையில் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி உடனடியாக கிடைக்காது. சற்று காலதாமதம் ஆகும். அதற்கு காலமும், ஆண்டவன் அருளும் துணை செய்யும். அதன் பிறகு வெற்றி கிடைக்கும். ரசிகர்கள் இருக்கும் வரை அண்ணா எப்போதும் உற்சாகமாக உழைத்து உழைத்து இன்னும் உயரத்துக்கு அனைவரையும் அழைத்துச் செல்வார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !