பிளாஷ்பேக் : 3 தீபாவளி கொண்டாடிய 'ஹரிதாஸ்'
தீபாவளியையும், சினிமாவையும் பிரிக்கவே முடியாது. தீபாவளி அன்று படம் வெளிவருவதை நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் பெருமையாக நினைத்தார்கள். தீபாவளி வெளியீட்டை திட்டமிட்டே பல படங்கள் வந்திருக்கிறது. அத்தகைய படங்களில் தீபாவளி தொடர்பான காட்சிகள் கட்டாயம் இடம் பெற்றது. தீபாவளியன்று வெளியிடப்படும் படங்கள் தோல்வி அடையாது என்ற சென்டிமெண்டும் இருந்தது.
தீபாவளி வெளியீட்டில் பல படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளன. அவற்றில் 'ஹரிதாஸ்' படம் பெரும் சாதனை படைத்தது. தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும், அவருக்கு ஜோடியாக வி.சி.வசந்தகோகிலமும் நடித்திருந்த படம் இது. 1944ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம், சென்னை பிராட்வே திரையரங்கில் 110 வாரங்கள் ஓடி மூன்று தீபாவளியைக் கொண்டாடியது.
தாசியின் மீது மோகம் கொண்டு தாய், தந்தை, மனைவியை உதாசீனப்படுத்தி, செல்வங்களை இழந்து, கால்களை இழந்து துன்பப்படும் ஒருவன், மனம் திருந்தி கிருஷ்ண பக்தனாகும் கதை. இந்த படத்தை என்.டி.ராமாராவ் நடிப்பில், 'பாண்டுரங்க மஹாத்யம்' என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்தார்கள். அதை 1957-ம் ஆண்டு தமிழில் 'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து திரையிட்டனர். அதுவும் இங்கே வெற்றிபெற்றது.