'சீன், மூக்குத்தி அம்மன் 2' படக்குழுவினருக்கு ஆர்ஜே பாலாஜி வாழ்த்து
தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ள சூர்யா நடித்துள்ள 'சீன்', நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய இரண்டு படங்களுக்கும் இயக்குனரும், நடிகருமான ஆர்ஜே பாலாஜிக்கும் ஒரு தொடர்பு உள்ளது. தனது இயக்கத்தில் முன்பு நடித்து பெரிய வரவேற்பைப் பெற்ற சூர்யா, நயன்தாரா ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.
இந்த 2026ம் ஆண்டில் முதன் முதலில் அதிக வசூலைக் குவித்த தமிழ்ப் படமாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து மே மாதம் வெளிவந்த 'கருப்பு' படம் அமைந்தது. சூர்யாவுக்கும் முதல் 300 கோடி வசூலைக் கொடுத்த படமாக இருந்தது.
சூர்யா நடித்துள்ள 'சீன்' படம் இன்று வெளியாவதை முன்னிட்டு, “அன்பிற்குரிய சூர்யா சார். இந்த ஆண்டு நமக்கு பல வகைகளில் மிகவும் சிறப்பான மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கிறது. அந்த அற்புதமான பட்டியலில் மேலும் ஒரு சிறப்பம்சமாக 'சீன்' படம் இணைகிறது. உங்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பாக அமையும் இப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறவும் வாழ்த்துகள் சார். ஜித்து மாதவன், நஸ்ரியா அசத்திவிட்டீர்கள் . இந்த தீபாவளி 'செம சீன் ஆக இருக்கப் போகிறது,” என வாழ்த்தியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் முதல் பாகம் 2020ல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் 'மூக்குத்தி அம்மன் 2' படம் இன்று வெளியாகிறது.
அதற்கு ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ள வாழ்த்தில், “எனக்கு மிகவும் பிடித்த, எவர்கிரீன் நயன்தாராவிற்கு 'மூக்குத்தி அம்மன் 2' படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். ஐசரி கணேஷ் அங்கிள், சுந்தர் சி சார் ஆகியோருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.