உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் காலை 6 மணி காட்சிகள் : அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்

மீண்டும் காலை 6 மணி காட்சிகள் : அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்

தமிழகத்தில் தியேட்டர்களில் கடந்த மூன்று வருடங்களாக அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. 2023ம் வருடம் பொங்கலுக்கு அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது ஆர்வ மிகுதியில் லாரி மீது நடனமாடிக் கொண்டிருந்த இளம் ரசிகர் ஒருவர் தவறி கீழே விழுந்து இறந்து போனார்.

அதன்பின் நடந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாகவும் அப்போதைய திமுக அரசு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதை நிறுத்தியது. காலை 9 மணி முதல் தான் சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த மே மாதம் புதிதாகப் பதவிக்கு வந்த நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக அரசும் அதையே தொடர்ந்து வந்தது. விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திற்குக் கூட அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்த் திரையுலக சங்கங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் சில தினங்களுக்கு முன்பு காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. படம் வெளியாகும் ஒரு நாள் மட்டுமல்லாது ஒரு வாரத்திற்கு அந்தக் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இன்று காலை 6 மணி காட்சிகள் ஆரம்பமானது. சூர்யா நடித்துள்ள 'சீன்' படத்திற்கு பெரும்பாலான தியேட்டர்களில் காலை 6 மணி காட்சிகள் ஹவுஸ்புல் ஆனது. அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களுக்குத் திரண்டு வந்து பட வெளியீட்டைக் கொண்டாடினார்கள்.

இன்றைய காலை 6 மணி காட்சிகளுக்கு மட்டும்தான் முன்பதிவு அதிகமாக நடந்துள்ளது. நாளை சனி, நாளை மறுநாள் தீபாவளி நாளிலும் அந்தக் காட்சிகளுக்கு குறிப்பிடும்படியான முன்பதிவு இல்லை. இன்று வெளியாகும் மற்றொரு படமான நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அதிக வரவேற்பில்லை.

ரசிகர்கள் அதிகம் இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும், அதுவும் படம் வெளியாகும் அன்றைய ஒரு நாளில் மட்டுமே இந்த காலை 6 மணி காட்சி வெற்றிகரமாக நடக்கும் எனத் தெரிகிறது. மற்ற நாட்களில் தியேட்டர்காரர்களே காட்சிகளை ரத்து செய்யக் கூடிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !