இந்துமுறைப்படி திருமணம் நடத்தியது ஏன்? நான் பினாமியா? தயாரிப்பாளர் கண்ணன் ரவி
துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி, தமிழில் 10க்கும் அதிகமான படங்களை தயாரித்து வருகிறார். அவர் தயாரிப்பில் பிரபுதேவா, வடிவேலு இணைந்து நடிக்கும் 'பேங் பேங்' பட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் படம் பற்றியும், சமீபத்தில் நடந்த தனது மகன் தீபக் ரவி திருமணம், அது தொடர்பான எழுந்த சர்ச்சைகள், வைதீக முறை திருமணம் குறித்து காரசாரமாக பதிலடி கொடுத்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேத்தி செந்தாமரையை அவர் மகன் தீபக் ரவி திருமணம் செய்துள்ளார். அந்த திருமணம் இந்துவைதீக முறைப்படி நடந்தது அரசியல் வட்டாரத்தில் சில பிரச்னைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கண்ணன் ரவி பேசியதாவது: நான் சின்ன பேக்குடன் துபாய் சென்று, படிப்படியாக வளர்ந்து தொழிலதிபர் ஆனேன். 35 ஆண்டுகளாக அங்கே இருக்கிறேன். இப்போது பல நிறுவனங்கள் நடத்தி வருகிறேன். என் மகன் திருமணத்தை அங்கேயே நடத்தி இருக்கலாம் அல்லது வேறு நாட்டில் நடத்தி இருக்கலாம். ஆனால், என் தாய் நாட்டில் நடத்த வேண்டும் என்று விரும்பியதால் சென்னையில் நடத்தினேன். என் சொந்த ஊரான திட்டக்குடியில் ஏன் நடத்தவில்லை என சிலர் கேட்கிறார்கள். அங்கே இவ்வளவு விஐபிகளை அழைக்க வசதி இல்லை. தங்க வைக்க ஓட்டல் இல்லை. ஏன் இவ்வளவு பிரமாண்டம் என கேட்கிறார்கள். என் மகன் திருமணத்தை இப்படி நடத்த ஆசைப்பட்டேன். அதில் என்ன தவறு.
திமுக.,வுக்கு தொடர்பா
நான் யாருக்கும் பினாமி இல்லை. என் சொந்த உழைப்பில் ஏகப்பட்ட நிறுவனங்கள் நடத்தி வருகிறேன். நான் சம்சா விற்றேன். துரைமுருகன், திருமாவளவனின் பினாமி என்கிறார்கள். நான் யாரிடமும் எந்த பணமும் வாங்கியது இல்லை. இந்த திருமணத்தை கூட என் சொந்த செலவில் நடத்தினேன். ஒரு பைசா கூட வரதட்சனை வாங்கியதில்லை. என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அவர்களுக்கு 1 லட்சம் பரிசு தருகிறேன். எந்த விவாதத்துக்கும் வர தயார்.
திருமணம் என்பது இரண்டு வீட்டார் சம்பந்தப்பட்டது. நான் பாரம்பரிய இந்துமுறைப்படி வைதீக திருமணம் நடத்த ஆசைப்பட்டேன். என் மனைவிக்கும் அதுதான் விருப்பம். அதனால், என் மகன் திருமணத்தை மந்திரங்கள் ஓத, இந்துமுறைப்படி நடத்தினேன். அதில் என்ன தவறு. அவரவர் மதப்படி நடத்துவதுதானே வாடிக்கை. நான் இந்து, வருங்காலத்திலும் என் குடும்ப திருமணத்தை அப்படிதான் நடத்துவேன். திமுகவுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. அந்த கட்சி தொடங்கியதில் இருந்து இன்றுவரை அந்த கட்சிகாரர்கள், நிர்வாகிகள் கோயிலுக்கு செல்கின்றன். அதை ஏன் கேட்கவில்லை. இந்த சர்ச்சையை கிளப்பியவர் குடும்பத்தில் என்ன நடந்தது என எனக்கும் தெரியும்.
அரசியல் ஆர்வம்
நான் துபாயில் இருந்தாலும் இங்கே நடப்பது எனக்கு தெரியும். வேத மந்திரங்கள் ஏன் கூடாது. எனக்கு பிரமாண நண்பர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள். என் வளர்ச்சியில் அவர்களுக்கும் பங்கு உண்டு. அவர்கள் தயிர் சாதம் சாப்பிட்டு எங்கேயோ வளர்ந்துவிட்டார்கள். அவர்களுடன் வேறு விஷயத்தில் போட்டி போட வேண்டும். தான் ஒரு இந்து என்பதால், தனது குடும்ப வழக்கப்படியும் வேத மந்திரங்கள் ஓதியும் இந்தத் திருமணத்தை நடத்தினேன். எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய தனக்கு முழு உரிமை உண்டு. நான் தேர்தலில் நிற்க ஆசைப்படுகிறேன். திட்டக்குடியில் நிற்க விரும்புகிறேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கிற ஐடியா இல்லை.
ரூ.65 ஆயிரம் கோடி
என் மகன் திருமணத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடியதற்கும் விமர்சனங்கள் எழுந்தன. என் மகன் திருமணத்தில் நான் சந்தோஷமாக நடனமாடாமல், அடுத்தவன் இறப்பிலா போய் ஆடுவேன்? அவன் எனது குழந்தை. அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும், அவனோடு துணை நிற்க வேண்டும் என்பது எனது எண்ணம். திருமாவளவனை துபாய்க்கு அழைத்துச் சென்று ஏதோ செய்ததாகவும், என்னிடம் திமுகவின் ரூ.65,000 கோடி பணம் உள்ளதாகவும் சிலர் கிளப்பி விடுகிறார்கள். என் கையில் மட்டும் ரூ.65,000 கோடி இருந்தால், தினமும் 600 கிராமங்களை தத்தெடுத்து நானே முழு செலவையும் ஏற்றுக்கொள்வேன். முடிந்தால் அந்த பணத்தை நீங்களே பேசி வாங்கிக் கொடுங்கள், அதை உங்களிடமே ஒப்படைக்கிறேன். என் மகள் திருமணத்தையும் இங்கே தான் இன்னும் பிரமாண்டமாக நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.