விஜய் சேதுபதிக்கு சர்வதேச அங்கீகாரம்
தனித்துவமான நடிப்பு பாணியை தேர்ந்தெடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. வித்தியாசமான கதை தேர்வு, ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு என தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் புகழ்பெற்ற இவருக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் ஒன்று கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில், வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கும் முக்கிய திரையுலக நபர்களில் ஒருவராக விஜய் சேதுபதி பங்கேற்கிறார்.
சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி வழங்கும் இந்த மதிப்புமிக்க சர்வதேச எம்மி விருது மேடையில் ஒரு இந்திய நடிகர் விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு, 2016ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 'பிரைம் டைம் எம்மி விருது' விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தார். விஜய் சேதுபதிக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கும் விஜய்சேதுபதிக்கும் உலக அரங்கில் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.