நாயகியான ஸ்மேஹா மணிமேகலை
'கனா காணும் காலங்கள்' தொடரில் பள்ளி மாணவி சங்கீதாவாக நடித்து கவனம் பெற்றவர் ஸ்மேஹா மணிமேகலை. தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரின் புதிய தொடரான 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ஆபீஸ்' தொடரில் நாயகி ஆகியிருக்கிறார். இதில் அவருடன் பிரதீப் ஆண்டனி, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த தொடர் வருகிற 18ம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
இந்தப் புதிய தமிழ் தொடர், ஒவ்வொரு புதன் கிழமையும் நான்கு எபிசோடுகளுடன் வெளியாகிறது. திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் கணவன், மனைவி, வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் தெரியாத அந்நியர்களைப் போல நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்னவாகும்? இந்த சுவாரஸ்யமான கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலுடன் இந்த தொடரின் திரைக்கதை அமைந்துள்ளது.
தொடரில் நடிப்பது குறித்து ஸ்மேகா மணிமேகலை கூறும்போது “திருமணமானவர்கள் பெரும்பாலும் வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வார்கள். ஆனால், அலுவலகத்தில் தங்களது கணவரையே தெரியாது என்று நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? ஐஸ்வர்யா தனது உறவு, வேலை மற்றும் எப்போது ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இதில் வரும் சூழல்கள் சிரிப்பை ஏற்படுத்தினாலும், இணைந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கப் போராடும் இருவரின் உண்மையான கதையும் இதில் இருக்கிறது என்றார்.